கோலாலம்பூர் – 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் (சொஸ்மா) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மீதான கைது நடவடிக்கையின் சட்டப்பூர்வத் தன்மைக்கு எதிராக ஆட்கொணர்வு மனுவைத் (habeas corpus) தாக்கல் செய்யவுள்ளது பெர்சே அமைப்பு.
இது குறித்து பெர்சே அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஃபாதியா நட்வா ஃபிக்ரி கூறுகையில், (மரியா) சின்னை உடனடியாக விடுதலை செய்யவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சட்டத்தை அகற்றவும் பெர்சே பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் படியான நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றதாக குற்றவியல் சட்டம், பிரிவு 124 (சி)-ன் கீழ் சின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 50 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க அச்சட்டத்தில் இடமுள்ளது. இது சின் மற்றும் பெர்சே மீதான மிகக் கொடுமையான குற்றச்சாட்டு.” என்றும் ஃபாதியா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு, ஜிஞ்ஜாங் காவல்நிலையத்தில் சின் மற்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி பெர்சே அமைப்பினர் ஊர்வலம் நடத்தப் போவதாகவும் ஃபாதியா குறிப்பிட்டுள்ளார்.