கோலாலம்பூர் – தலைநகரில் அமைந்துள்ள கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் கடந்த 13 நவம்பர் 2016-ஆம் நாள் ‘கலை இலக்கிய விழா 8 ‘ பல்வேறு நிகழ்வுகளுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. மலேசியாவில் நடத்தப்படும் இலக்கிய நிகழ்ச்சிகளில் வித்தியாசமானதாகவும் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் அடுத்தக் கட்டங்களை நோக்கிச் செல்வதாகவும் இலக்கிய விமர்சகர்களால் கருதப்படும் இந்நிகழ்ச்சியை வல்லினம் இலக்கியக் குழு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகின்றது.
எழுத்தாளர்களின் ஆவணப் படங்கள் வெளியீடு – (இடமிருந்து: கோ.புண்ணியவான், அரு.சு.ஜீவானந்தன், டாக்டர் சண்முக சிவா, சை.பீர் முகம்மது…
ஏறக்குறைய 250க்கும் அதிகமான இலக்கியவாதிகளும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் மா.சண்முகசிவா, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் ஆகியோரின் ஆவணப்படங்களும் அவர்களின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூலும் மேலும் அவர்களின் படைப்புகள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூலும் வெளியீடு செய்யப்பட்டது.
வரவேற்புரை ஆற்றிய இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் எழுத்தாளருமான ம.நவீன் (படம்), வல்லினத்தில் புதிதாக இணைய விரும்பும் எழுத்தாளர்களுக்கு முன் இருக்கும் சவால்களை எடுத்துக்கூறினார். வல்லினத்தில் இணைந்திருப்பது சுலபமில்லை என்ற அவர், அப்படி இருக்க அதிகாரத்திடம் சமரசம் இல்லாத போக்குத் தேவையென்றும் வாசிப்புக்கும் எழுத்துக்குமே வல்லினத்தில் முன்னுரிமை தரப்படும் என்றார். அப்போக்கு இல்லாதவர்கள் வல்லினத்தில் இருந்து வெளியேற்றப்படுவதும் சுயமாக வெளியேறுவதும் தொடர்ந்து நடக்கும் எனவும் அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
ஆவணப்படம் மற்றும் நூல்கள் வெளியீடு
வந்திருந்த பிரமுகர்களுடனான கலந்துரையாடல்….
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் உரை திரையில் காணொளியாக ஒளிபரப்பானது. தொடர்ந்து ‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ என்ற ஆவணப்படத்தின் தொகுப்புக் காட்சி இடம்பெற்றது. சிங்கையிலிருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த எழுத்தாளர் ஷானவாஸ், அ.ரெங்கசாமி, முன்னால் மின்னல் பண்பலையின் தலைவர் இராஜசேகரன் ஆகியோரால் ஆவணப்படம் வெளியீடு கண்டது.
தமிழ் சிறுகதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் வெளியீடு….
தொடர்ந்து விமர்சன நூலான ‘புனைவுநிலை உரைத்தல்’ முனைவர் ஸ்ரீலட்சுமி அவர்களால் வெளியீடு கண்டது. சிங்கைச் சூழலில் முக்கிய விமர்சகரான அவரால் அந்நூல் வெளியீடு செய்யப்பட்டது. அந்நூலில் விமர்சனக் கட்டுரை எழுதிய ம.நவீன், மஹாத்மன், கங்காதுரை, பாண்டியன் ஆகியோர் மேடையில் அமர நூல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அறிவிப்பாளரான தயாஜியே அவ்வங்கத்தை வழிநடத்தினார்.
வழக்கம்போல எழுத்தாளர்களுக்கு உரிமம் (ராயல்டி) வழங்கும் அங்கம் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது. ராயல்டி தொகையான 2000 ரிங்கிட்டை சம அளவாகப் பகிர்ந்து ஓர் எழுத்தாளருக்கு 500.00 ரிங்கிட் வழங்கப்பட்டது. மலேசியாவில் வல்லினம் பதிப்பகம் உரிமம் (ராயல்டி), பதிப்புரிமை போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
நாஞ்சில் நாடன் இலக்கிய உரை
இந்நிகழ்ச்சிக்கென தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் (படம்) அவர்களின் சிறப்புரையும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது. சிறுகதைகளின் போக்குகள் குறித்தும் ஆவணப்படம் உருவாக்கப்பட காரணமாக அமைந்த ஆளுமைகளின் சிறுகதைகள் குறித்தும் மேலும் அண்மையக் காலத்தில் வெளிவந்த தமிழகத்தின் சில சிறுகதைகள் குறித்தும் அவர் உரையாற்றினார்.
சிறுகதைப் போட்டி முடிவுகள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்கள்
பரிசு பெற்றவர்கள் பட்டியல்:
முதல் பரிசு : செல்வன் காசிலிங்கம் – வலி அறிதல்
இரண்டாவது பரிசு : ஐஸ்வரியா கணபதி – உப்பு
மூன்றாவது பரிசு : மதியழகன் முனியாண்டி – குளத்தில் முதலைகள்
ஆறுதல் பரிசுகள்:
உதயகுமாரி கிருஷ்ணன் – ரகசியம்
மஹாத்மன் – மூன்று புள்ளிகளுக்கு நடுவே
சிவனேஸ்வரி செல்வநாதம் – இதுவும் கடந்து போகும்
சண்முகம் இளமுருகு – வாழைமரங்கள்
குப்புசாமி முனியாண்டி – அறுபது காசு
நல்லம்மா இராமசாமி – தண்ணீர்
பரிமாளா சுப்பிரமணியம் – அவனுக்குத் தெரியாது
நிறைவு
அறிவித்தபடி ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் சரியாக இரண்டு மணிக்கு தொடங்கிய ‘வல்லினத்தின் கலை இலக்கிய விழா 8’ மாலை 5 மணிக்கு முடிவுற்று மலேசிய இலக்கிய உலகில் புதிய தடயங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்ட வாசகர்கள் – எழுத்தாளர்கள்…