கோலாலம்பூர் – நடந்து வந்த பாதையை, ஒரு கணம் நின்று திரும்பிப் பார்க்கும்போது நமக்கே பிரமிப்பாகவும், பெருமிதமாகவும் இருக்கின்றது.
எதிர்வரும் டிசம்பர் 12-ஆம் தேதியோடு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கின்றது செல்லியல்.
12 டிசம்பர் 2012-ஆம் நாள் செல்லியல் என்ற இணைய ஊடகத்தை இணையத் தளம் வாயிலாகவும், ‘மொபைல் எப்ஸ்’ எனப்படும் குறுஞ்செயலி வாயிலாகவும் தமிழ் உலகுக்குள் இலவசப் பதிப்பாகவே உலவ விட்டோம்.
செல்லியல் அறிமுக விழாவின் போது – செல்லியலின் தொழில் நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் – செல்லியல் ஆசிரியர் இரா.முத்தரசன்….
செல்பேபேசிகளுக்கான தொழில் நுட்பத்தைக் கொண்ட ஊடகம் என்பதையும், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில், இயல் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற முறையிலும், ‘செல்லியல்’ என்ற தமிழுக்கே புதிய சொற்கோர்வை ஒன்றை உருவாக்கி அதற்குத் தலைப்பும் இட்டோம்.
இந்த 4 ஆண்டுகளில் 14,000 ஆயிரம் செய்திகளை தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கியிருக்கின்றோம் என எங்களின் தரவுகளின் புள்ளிவிவரங்கள் காட்டும்போது, உண்மையிலேயே பிரமிப்பும், பெருமிதமும் கொள்கின்றோம்.
கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில், பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழகத்தின் தமிழ் ஊடகங்களோடு ஒப்பிடும்போது இந்த சாதனை சிறியதுதான் என்பது எங்களுக்கும் தெரியும்.
இன்று, மிகப் பெரிய முதலீட்டு பலத்தையும், விரிவான விளம்பர, வணிக, அடித்தளத்தையும் வலுவாகக் கொண்ட தமிழக தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும், குறுஞ்செயலி வடிவத்திற்கு போட்டி போட்டுக் கொண்டு மாறிவருகின்றன.
ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே, இன்று பரவலாக இருக்கும் குறுஞ்செயலி வடிவத்திற்கு ஒரு தமிழ் ஊடகத்தைக் கொண்டு சென்றது – அதுவும் மலேசியாவிலிருந்து – முதன் முதலில் கொண்டு சென்றது – செல்லியல்தான் என்பதில்தான் நமது சாதனையும், பெருமையும் அடங்கியிருக்கின்றது.
தொழில் நுட்ப மேம்பாடுகளால் அண்மையக் காலமாக சில தடைகள்
எதிர்வரும் காலங்களிலும் இன்னும் வீரியத்துடன், விவேகத்துடனும், வேகத்துடனும், தொழில்நுட்ப ஆற்றலில் எந்த மொழிக்கும் நாமும் சளைத்தவர்களில்லை என்பதை எடுத்துக் காட்டும் விதமாகவும் நமது பயணம் தொடர வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் நாங்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.
அதற்காக, தற்போதுள்ள தரவு கொள்ளிட வசதியைவிட பன்மடங்கு அதிக அளவு கொண்ட தளத்திற்கு (hosting) மாறுவது – புதிய தோற்றத்துடன் கூடிய முகப்புகளோடு செல்லியலை வடிவமைப்பது – குறுஞ்செயலி தொழில்நுட்பத்தில் ஆகக் கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தொழில் நுட்ப நுணுக்கங்களை நமது தமிழ் மொழிக்கும் மடைமாற்றுவது – என்பது போன்ற தொழில் நுட்ப மேம்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நாம் முன்பு கூறியபடி, கடந்த 4 ஆண்டுகளில் நாம் வெளியிட்ட 14,000-க்கும் மேற்பட்ட செய்தித் தொகுப்புகளில் பெரும்பான்மையானவை மலேசிய நிகழ்வுகளை, வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்டவை என்பதால், அவை மலேசிய இந்தியர்களின் தமிழிலான ஆவணப் பெட்டகமாக உருவெடுத்துள்ளது – என்ற பெருமையும் நமக்குண்டு.
அதனை எதிர்கால சந்ததியினருக்காகவும், இணையத்தள பயனர்களுக்காகவும், பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் நமக்கு உண்டு.
எனவேதான், செல்லியல் தரவுகளை புதிய தளத்திற்கு மாற்றுவது – புதிய தோற்றத்தில் செல்லியலை வடிவமைப்பது – புதிய தொழில்நுட்ப நுணுக்கங்களை நமது குறுஞ்செயலியில் புகுத்தி, பயிற்சி செய்து பார்ப்பது – போன்ற காரணங்களால் கடந்த ஓரிரு வாரங்களாக செல்லியல் பயனர்கள் அடிக்கடி தடைகளைச் சந்தித்து வருவதோடு, குறைந்த அளவிலான செய்திகளையும் பெற்று வருகின்றார்கள்.
பல வாசகர்கள் எங்களிடம் நேரடியாகவும், இணையம் மூலமாகவும், நட்பு ஊடகங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு இதுகுறித்து அடிக்கடி விசாரித்து வருகின்றார்கள்.
இதிலிருந்து செல்லியல் வாசகர்கள் நம் மீது காட்டி வரும் ஆர்வமும், அக்கறையும் நமக்குப் புலப்படுகின்றது.
செல்லியல் வாசகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசௌகரியங்களுக்கு எங்களின் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதே வேளையில், செல்லியல், விரைவில் புதிய தோற்றத்துடன், மேலும் சில நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வலம் வரும் வரை பொறுமை காக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
செல்லியலின் தமிழ்ப் பயணத்தில் எங்களோடு இணைந்திருந்து ஆதரவு வழங்கி வந்த அனைத்து வாசகர்களுக்கும், நட்பு வட்டாரங்களுக்கும், இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு,
இன்னும் அதிகமான வேகத்துடனும், வீரியத்துடனும் நாம் தொடர்ந்து நடை போடுவோம் எனவும் உறுதி கூறுகின்றோம்.
-செல்லியல் குழுமத்தினர்