ஷா ஆலம் – கோலாலம்பூர் – சிங்கப்பூர் இடையிலான துரித இரயில் திட்டத்தில், 9-வது பயண முகப்பிடமாக பாங்கியைச் சேர்க்க சிலாங்கூர் அரசாங்கம், கூட்டரசுப் பிரதேச அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது.
பல்வேறு தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும் நிறைந்த சிலாங்கூரில் குறைந்தது ஒரு இரயில் நிறுத்தம் இருப்பது அம்மாநிலத்தின் வர்த்தக வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கும் என்று சிலாங்கூர் கைத்தொழில், சிறு வர்த்தக மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து முதலீட்டுக் குழுவின் தலைவர், மாநில செயற்குழு கவுன்சிலர் டத்தோ தெங் சாங் கிம் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரில் பாங்கியைத் தவிர, செர்டாங், பூச்சோங் ஆகிய இரண்டு இடங்களும் இரயில் நிறுத்தம் அமைக்கப் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்துள்ள சிலாங்கூர் அரசு, அதனை கூட்டரசிடம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான துரித இரயில் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி கையெழுத்தானது.
350 கிலோ மீட்டர் நீளமுள்ள இரயில் பாதையைக் கொண்ட இந்தத் திட்டத்தில் 335 கிலோ மீட்டர் இரயில் பாதை மலேசியாவுக்குள் இருக்கும் என்பதோடு கோலாலம்பூரின் பண்டார் மலேசியா பகுதியில் இருந்து இந்த இரயில் பாதை தொடங்கும். எஞ்சிய 15 கிலோ மீட்டர், சிங்கப்பூருக்குள் நிர்மாணிக்கப்பட்டு, ஜூரோங் கிழக்கு (ஈஸ்ட்) என்ற இடத்தில் முடிவுறும்.
கோலாலம்பூரில் இருந்து புறப்படும் இரயில் சேவையின் வழியில் புத்ரா ஜெயா, சிரம்பான், ஆயர் குரோ, மூவார், பத்து பகாட், இஸ்கண்டார் புத்திரி ஆகிய ஆறு பயண முகப்பிடங்கள் (ஸ்டேஷன்) அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.