Home Featured இந்தியா பிரவாசி 2017: ‘கடப்பிதழ் நிறம் வேறாக இருக்கலாம் இரத்த உறவு மாறாது’ – மோடி உரை!

பிரவாசி 2017: ‘கடப்பிதழ் நிறம் வேறாக இருக்கலாம் இரத்த உறவு மாறாது’ – மோடி உரை!

687
0
SHARE
Ad

modi43பெங்களூர் – பெங்களூரில் நடைபெற்று வரும் பிரவாசி பாதிய திவாஸ் 2017 மாநாடு, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

இம்மாநாட்டில் மோடி உரையாற்றுகையில், 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் 2017 மாநாட்டில் உலகமெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் கடல் கடந்து வந்து கலந்து கொண்டிருப்பதாகவும், லட்சக்கணக்கானோர் டிஜிட்டல் தளங்களின் வழியாக இம்மாநாட்டுடன் இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

உலகெங்கிலும் 30 மில்லியனுக்கும் மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட மோடி, அந்த எண்ணிக்கை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே இருந்துவிடக் கூடாது என்றும், இந்தியாவிற்கு அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்தியப் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு அளவிடமுடியாதது என்றும் மோடி தெரிவித்தார். அது இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்றும் மோடி தெரிவித்தார்.

அதோடு, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்தியக் கலாசாரத்தையும், ஒழுக்கத்தையும், உலகெங்கிலும் எடுத்துச் சென்று, மற்ற இனத்தவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் கடப்பிதழ்கள் வேறு வேறு நிறங்களாக இருந்தாலும் கூட, இந்தியா அவர்களை ஒரே இரத்த உறவுகளாகத் தான் பார்க்கின்றது என்று மோடி தெரிவித்தார்.

எனவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களிடம் உள்ள பிஐஓ (PIO) அட்டைகளை ஓசிஐ (OCI) அட்டைகளாக மாற்றிக் கொள்ளும் படி மோடி வலியுறுத்தினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய பிரஜைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்திய அரசு உடனடித் தீர்வை ஏற்படுத்திக் கொடுத்து வருவதாகவும், அதற்கு இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களின் வாயிலாக, பாதிக்கப்பட்டோருடனும், அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டு தீர்வு கண்டு வருவதாக மோடி தெரிவித்தார்.

அதற்காக அவர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்களுடன் நெருக்கமான உறவு

வெளிநாடுகளில் வசித்து வரும் இந்திய இளைஞர்களுடன் இந்திய அரசாங்கம் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருப்பதாக மோடி தெரிவித்தார். இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து இளம் இந்திய இளைஞர்கள் கலந்து கொண்டிருப்பதாகவும், அவர்களை வரவேற்பதாகவும் மோடி தெரிவித்தார்.

நேரடிச் செய்திகள் – ஃபீனிக்ஸ்தாசன்