புதுடில்லி – தமிழக அரசு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்திற்கு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநரின் மூலமாக அனுப்பப்பட்ட இந்த சட்டத்திற்கு இந்திய அதிபர் ஒப்புதல் அளித்திருப்பதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் மீதான சட்டம் நிரந்தரமான சட்டமாக உருவெடுத்துள்ளது.
இனி இந்தச் சட்டம் தொடர்பான சட்ட இடையூறுகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகின்றது.
இருப்பினும், இந்தச் சட்டம் தொடர்பாக பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் செய்துள்ள இடைக்கால மனுக்கள் மீதான விசாரணைகளை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.