மதுரை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வியாழக்கிழமை (ஜனவரி 14) தமிழகத்தின் மதுரை நகருக்கு வருகை மேற்கொண்டார். மதுரை அவனியாபுரத்தில் நடந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழாவை அவர் கண்டு இரசித்தார்.
அவருடன் திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து ஜல்லிக் கட்டு விழாவைக் கண்டு களித்தார். இதைத் தொடர்ந்து ராகுலின் மதுரை வருகையும், ஜல்லிக்கட்டு விழாவைப் பார்த்ததும் டுவிட்டரில் இந்தியா முழுவதும் அதிகமானவர்கள் பின்தொடரும் (டிரெண்டிங்) செய்திகளாயின.
தனது வருகையின் ஒரு பகுதியாக ராகுல் அந்த வட்டார மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
ராகுலின் வருகையில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கலந்து கொண்டார்.
ஜல்லிக்கட்டு விழாவில் மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கு ராகுலும் உதயநிதியும் பரிசுகளை எடுத்து வழங்கினர்.
பின்னர், விழாவில் உரையாற்றிய ராகுல் காந்தி, தமிழர் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் காக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
பொங்கலை முன்னிட்டு இன்று முதல் ஜல்லிக்கட்டு விழா அவனியாபுரத்தில் நடந்தது. அடுத்த பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களிலும் ஜல்லிக் கட்டு நடைபெறுகிறது.