Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “கபில்” – பார்வையற்ற ஹிரித்திக் ரோஷனின் பழிவாங்கும் போராட்டம்!

திரைவிமர்சனம்: “கபில்” – பார்வையற்ற ஹிரித்திக் ரோஷனின் பழிவாங்கும் போராட்டம்!

923
0
SHARE
Ad

Kaabil-song

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் ஷாருக்கானின் “ராயிஸ்” திரைப்படத்திற்குப் போட்டியாக, மற்றொரு முன்னணி நடிகரான ஹிரித்திக் ரோஷனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘கபில்’.

“திறனாளி” என்பது ‘கபில்’ என்ற இந்தித் தலைப்பின் அர்த்தம்!

#TamilSchoolmychoice

பாராட்டத்தக்க சில அம்சங்கள் இருந்தாலும் – ஹிரித்திக் ரோஷன் மிகப் பிரமாதமான நடிப்பை வழங்கியிருந்தாலும் – நம்ப முடியாத சம்பவங்கள் – பார்வையற்ற கதாநாயகனின் அளவுக்கதிகமான ஹீரோத்தனம் ஆகியவற்றால் படம் ஏமாற்றத்தைத் தருகின்றது.

கதை-திரைக்கதை – நம்ப முடியாத சம்பவங்களின் குவியல்

kaabil-hrithik-yami-poster

பார்வையற்ற ஹிரித்திக் ரோஷன், ஆரம்பக் காட்சிகளிலேயே மற்றொரு பார்வையற்ற பெண்ணான யாமி கௌதமை (தமிழில் ‘கௌரவம்’, ‘தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படங்களின் கதாநாயகி) சக நண்பர்களின் அறிமுகத்தால் திருமணம் செய்துகொள்கின்றார்.யாமியோ பேரழகி என்பதில்தான் பிரச்சனை தொடங்குகின்றது.

இருவருக்குமே குடும்பம் எதுவும் இல்லை என்று காட்டப்படுவது படத்தின் முதல் நம்ப முடியாத ஓர் அம்சம்.

வில்லன் கும்பலால் மனைவிக்கு நேரும் கொடூரத்தைத் தொடர்ந்து சட்டரீதியாகப் போராட ஹிரித்திக் முயற்சி செய்கிறார். ஆனால், வில்லன் குழுவினரின் ஆதிக்கம், பண பலம், அரசியல் பலம் ஆகியவற்றால், காவல் துறையினர் பணம் வாங்கிக் கொண்டு ஹிரித்திக் ரோஷனின் கண்பார்வையற்ற நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஒதுக்கித் தள்ளி விடுகின்றனர்.

தனது புத்திசாலித்தனத்தால், தனது மனைவிக்கு நிகழ்ந்த கொடூரத்திற்குத் துணை போனவர்களை ஹிரித்திக் எவ்வாறு பழிவாங்குகின்றார் என்பதுதான் கதை.

kaabil-yaami-hrithik-posterமுதல் பாதியில் நம்பும்படியாக நகரும் திரைக்கதை, நம் மனங்களில் கனத்த சோகத்தையும், உருக்கத்தையும் விதைத்து விடுகின்றது. கதாநாயகன்- நாயகி இருவருமே கண் பார்வையற்றவர்கள் என்பதால் அவர்களுக்கு நேரும் சிக்கல்கள், பிரச்சனைகள் வித்தியாசமாகக் காட்டப்பட்டுள்ளன.

ஆனால், ஹிரித்திக் பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கும்போது அதில் புத்திசாலித்தனம் தெரிந்தாலும், கண் பார்வையற்ற ஒருவருக்கு இவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்திருக்க முடியுமா, இவ்வளவு துல்லியமாக அவரால் திட்டமிட முடியுமா என்ற சந்தேகங்கள் நமக்கு எழுந்துவிட, படமும் அங்கே விழுந்து விடுகின்றது.

அதிலும் குறிப்பாக, கட்டுமானம் முடிக்கப்படாத அடுக்குமாடி கட்டிடத்திற்குள் நுழைந்து ஹிரித்திக் அவ்வளவு துல்லியமாக திட்டமிட்டு வில்லனை வீழ்த்துவது “போங்கடாப்பா!” என நம்மை அவநம்பிக்கையாகச் சொல்ல வைக்கிறது.

ஹிரித்திக் கொண்டிருக்கும் சில திறன்கள், நுணுக்கமான உணர்வுகள் ஆகியவை காரணமாகவே, அவரால் பழிவாங்க முடிகின்றது எனக் காட்டப்பட்டாலும், வழக்கமான இந்திப் பட ஹீரோவுக்கு நிகராகவே, சண்டை போடுவது உட்பட அனைத்தையும் செய்கின்றார் ஹிரித்திக்.

நடிப்பில் ஒளிவிடும் ஹிரித்திக்

Kaabil-poster

சோகமும், உருக்கமும் படம் முழுவதும் விரவிக் கிடக்க, நம்மை படத்தோடு ஒன்றி உட்கார வைப்பது ஹிரித்திக்கின் நடிப்புதான்.

கண்பார்வை இல்லாவிட்டாலும், உற்சாகம் குன்றாமல் உலா வருவது, தனது சில திறன்களை அவ்வப்போது வெளிக்காட்டுவது, பொது இடங்களில் அசல் கண்பார்வையற்ற ஒருவனைப் போல் நடந்து கொள்வது என உண்மையிலேயே கண் தெரியாத ஒருவனை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஹிரித்திக்.

அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டும் பல காட்சிகளில் நமக்கும் கைத்தட்டத் தோன்றுகின்றது. குறிப்பாக, ஹிரித்திக்கைப் புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரி இறுதிக் காட்சியில், தனது புலனாய்வின் மூலம் ஹிரித்திக்தான் கொலைகாரர் என்பதைக் கண்டுபிடிக்கும் தருணத்தில் காட்டப்படும் திருப்பம் – அபாரமான கிளைமாக்ஸ் எனப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

யாமி கௌதம் நம்மைக் கண்கொட்டாமல் பார்க்க வைக்கும் அழகுப் பதுமை. ஆனால் எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பது கொஞ்சம் செயற்கைத் தனமாகத் தெரிகின்றது. அவருக்கு நேரும் துயரம் நமது மனங்களையும் கனக்கச் செய்து விடுகின்றது.

படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், ஓர் உச்ச கட்ட நட்சத்திரமாக உலா வந்து கொண்டிருக்கும் தருணத்தில், இது போன்ற ஒரு கதையில், கண் பார்வையற்றவராக நடிப்பதற்கு துணிச்சலாக முன்வந்திருப்பதற்காகவே ஹிரித்திக்கைப் பாராட்டலாம்.

இரசிகர்களும் ஓரளவுக்கு ஹிரித்திக்கின் அணுகுமுறையை வரவேற்கிறார்கள் என்பதைக் காட்டும் வண்ணம், படம் வெளியான நான்கு நாட்களுக்குள் 50 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி இந்தியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

-இரா.முத்தரசன்