Home Featured நாடு பினாங்கில் வியாழக்கிழமை தங்க இரத வெள்ளோட்டம்!

பினாங்கில் வியாழக்கிழமை தங்க இரத வெள்ளோட்டம்!

809
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – பினாங்கில் தைப்பூசத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய தங்க இரதம், நாளை வியாழக்கிழமை காலை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக, அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி 3 கிலோமீட்டர் வரை வலம் வரவுள்ளது.

காலை 10 மணியளவில் தொடங்கும் தங்க இரத வெள்ளோட்டம், இரண்டு மணி நேரம் நடைபெறவுள்ளது. இதில் 20 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இரதத்தை இழுத்துச் செல்வார்கள்.

ramasamy-golden chariotஇது குறித்து தண்ணீர்மலை ஆலயத் தலைவர் ஆர்.சுப்ரமணியம் கூறுகையில், “இரதத்தில் தங்கக் குடம் வைக்கப்படவுள்ளது. அதில் புனித நீர் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும். தண்ணீர்மலை ஆலயத்தில் இருந்து வெள்ளோட்டம் தொடங்குவதற்கு முன் அதிகாலை சிறப்பு பூஜைகளை நடத்துவோம்.”

#TamilSchoolmychoice

“பின்னர், தங்க இரதம் மலையடிவாரத்திற்குக் கொண்டு வரப்பட்டு, வீதிகளில் வலம் வரும்” என்று ஆர்.சுப்ரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஜாலான் கெபுன் பூங்கா, லோரோங் ஆயர் தெர்ஜுன், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் மாசாலிஸ்டெர், ஜாலான் ரெசிடென்சி, ஜாலான் உத்தாமா ஆகிய வீதிகள் வழியாக வலம் வரும் இந்தத் தங்க இரதம் இறுதியில் ஆலயத்தை அடையும் என்றும் ஆர்.சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

இதனிடையே, தங்க இரத வெள்ளோட்டத்திற்கு, ஆலய நிர்வாகம் காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டது என்றும், வெள்ளோட்டத்தின் போது சாலைகள் எதுவும் மூடப்படாது என்றும் ஆர்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

இதனிடையே தங்க இரத ஊர்வலம் குறித்து பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் பேராசிரிய பி.இராமசாமி கூறுகையில், தண்ணீர்மலை ஆலயத்தில் காலை 6.30 மணியளவில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

தைப்பூசத் திருவிழாவின் போது, தங்க இரத வீதிகளில் 160 தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இலவச பானங்களும், சைவ உணவுகளும் வழங்கப்படும் என்றும் இராமசாமி தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இது 10 விழுக்காடு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் இராமசாமி குறிப்பிட்டார்.

ஆண்டாண்டு காலமாக செட்டியார்கள் எனப்படும் நகரத்தார் சமூகத்தினரால், தைப்பூசத்தின் போது வெள்ளி இரத ஊர்வலம் நடைபெற்று வந்த நிலையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தால் இந்தத்  தங்க இரதம் உருவாக்கப்பட்டு, தைப்பூசத்தை முன்னிட்டு இந்த ஆண்டு முதன் முறையாக ஊர்வலம் நடத்தப்படவிருக்கின்றது.

பினாங்கு மாநிலத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு இரண்டு இரதங்கள் வலம் வர இருப்பது இதுவே முதல் முறையாகும்.

தற்போது, எந்த இரதம் முதலில் செல்வது என்று இருதரப்பினருக்கும் இடையில் பூசல்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.