புதுடில்லி – காங்கிரஸ் சார்பில் விடுக்கப்பட்ட எதிர்ப்புகளை இந்திய நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிராகரித்ததைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார்.
காலை 11.00 மணிக்கு (இந்திய நேரம்) நாடாளுமன்றம் தொடங்கியபோது, அவைத் தலைவர் சுமித்ரா, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமதுவுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் நாளை நாடாளுமன்ற அவை நடைபெறாது என்றும் அறிவித்தார்.
இருப்பினும், திட்டமிட்டபடி இன்று வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என சுமித்ரா அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் எழுந்த மல்லிகார்ஜூன் கார்கே, மறைந்த இ.அகமது மிகவும் மூத்த, நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
எனினும், மல்லிகார்ஜூனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் கூக்குரல்கள், எதிர்ப்புகள் எழுப்பப்பட்டன. இருப்பினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த மகாஜன், வரவு செலவுத் திட்டம் என்பது அரசியல் சாசனப்படி சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் எந்தக் காரணத்திற்காகவும் அதனை ஒத்தி வைக்க முடியாது என்றும் அறிவித்தார்.
அந்த முடிவைத் தொடர்ந்து அருண் ஜெட்லி தனது வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றத் தொடங்கினார்.