கோலாலம்பூர் – கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கி, 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா (வயது 56) வரும் ஞாயிற்ற்றுக்கிழமை வரை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, கனடா எல்லை சேவை முகமையைச் சேர்ந்த 3 பாதுகாவலர்களுடன் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
“நீங்கள் ஒரு மிக மோசமான குற்றவாளி என்பதோடு, என்னுடைய வாழ்க்கையில், மிகவும் சவாலான பணி இப்போது என் முன்னே இருக்கின்றது” என்று கனடா நீதிபதியும், குடிநுழைவு மற்றும் அகதிகள் வாரியத்தின் தலைவருமான ஆண்ட்ரியூ லாட், செல்வக்குமாரிடம் கூறியதாக கனடா நாளிதழ் ஒன்று கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1000 பெண்கள் மற்றும் சிறுமிகளை செல்வகுமார் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
எனினும், சொந்த நாடான மலேசியாவிற்குத் திரும்பும் அவரைத் தடுக்கும் அதிகாரம் நமக்கு இல்லை என்றும், என்றாலும் அவர் மீது காவல்துறை எப்போதும் கவனம் வைத்திருக்கும் என்றும் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.