வாஷிங்டன் – அமெரிக்க ஐடி நிறுவனங்களில் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் எச்1பி, எல்1 விசாக்களில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளதால், அமெரிக்கா செல்லும் கனவோடு காத்திருக்கும் இந்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் அதிரடியாக சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ள ட்ரம்பின் அடுத்த உத்தரவு, எச்1பி மற்றும் எல்1 விசாக்களை கட்டுப்படுத்தும் வகையில் அமையும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எச்1பி விசா பெற வேண்டுமானால் குறைந்தது ஆண்டுக்கு 60,000 அமெரிக்க டாலர் ஊதியம் பெற வேண்டும் என்பது நடப்பு விதிமுறையாக உள்ள நிலையில், அந்த ஊதியத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அதன் படி பார்த்தால், இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் யாரையும் அப்பணிகளில் அமர்த்த முடியாத நிலை ஏற்படும். இதனால் அதிகமான அமெரிக்கர்கள் அப்பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.
இதனிடையே, எச்1பி விசா சீர்த்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து செல்லும் ஐடி ஊழியர்களில் பெரும்பாலானோர் எச்1பி விசா பெற்று, ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.