பத்துமலை – பத்துமலை தைப்பூசத் திருவிழாவின் போது சாயம் தெளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாக கைது செய்யும் என கோம்பாக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அலி அகமட் தெரிவித்தார்.
இது குறித்து இன்று வெள்ளிக்கிழமை பத்துமலை ஆலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அலி அகமட், “கையில் சாயப் பூச்சு கேன்களுடன் (spray paint cans) யாரையாவது பார்த்தோம் என்றால், அவர்களை உடனடியாக தடுத்து விசாரணை செய்வோம். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி, அவர்கள் பொதுமக்கள் மீது சாயம் பூசும் எண்ணத்தோடு அதை எடுத்து வந்திருந்தால், எந்த ஒரு ஆணையும் இன்றி 24 நேரம் அவர்களைத் தடுத்து வைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில், பத்துமலையில் 2,000 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் இருப்பதோடு, திருவிழாவில் 5 தற்காலிக காவல்துறை முகப்புகளும் அமைக்கப்படும் என்று அலி அகமட் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா கூறுகையில், பெண்கள் முடிந்த வரையில் பஞ்சாபி சூட்ஸ் எனப்படும் சுடிதார்களை அணிவது நல்லது. சேலை அணியும் பட்சத்தில் முதுகு தெரியும் படியான மேலாடைகளை அணிய வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்.
மேலும், இவ்வாண்டு பத்துமலைத் தைப்பூசத் திருவிழாவில் சுமார் 1.6 மில்லியன் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.