கோலாலம்பூர் – வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியப் பிரஜைகள், மலேசியாவிற்கு வருவதற்கு இனி விசா தேவையிருக்காது என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்திலும், மலேசியாவிற்கு அவர்கள் எளிதில் வந்து போகும் வகையிலும், இந்த விசா தளர்வு குறித்து அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்டதாக சாஹிட் தெரிவித்தார்.
குறிப்பாக, கத்தார் போன்ற நாடுகளில் வசிக்கும் சுமார் 5 லட்சம் இந்திய பிரஜைகள், தொழிலதிபர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், நிபுணர்களாகவும் உள்ளதாகக் குறிப்பிட்ட சாஹிட், அவர்கள் மலேசியாவிற்கு சுற்றுப் பயணிகளாக அழைக்கப்படுகின்றார்கள் என்று தெரிவித்தார்.
மலேசியாவிற்கு வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சியில் அது முக்கியப் பங்காற்றும் என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.
என்றாலும், அதற்காக பாதுகாப்புச் சோதனைகளில் எந்த ஒரு தளர்வு இருக்காது என்றும் சாஹிட் தெரிவித்தார்.
கத்தாருக்கும், மலேசியாவிற்கும் இடையில் நேரடி விமானச் சேவைகள் இருப்பதால், அதிகமான சுற்றுலாப் பயணிகளை மலேசியாவிற்கு வரவழைக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக சாஹிட் தெரிவித்தார்.
கத்தாருக்கு நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் சாஹிட், அங்கு கத்தார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் காலிஃபா அல் தானியைச் சந்தித்து இம்முடிவு குறித்து கலந்தாலோசித்தார்.