Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘சிங்கம் 3’ – சொதப்பிய திரைக்கதை, சூர்யாவும், வேகமும் மட்டுமே ஆறுதல்!

திரைவிமர்சனம்: ‘சிங்கம் 3’ – சொதப்பிய திரைக்கதை, சூர்யாவும், வேகமும் மட்டுமே ஆறுதல்!

1421
0
SHARE
Ad

Singam5கோலாலம்பூர் – ஆந்திர போலீஸ் கமிஷனர் ஜெயபிரகாஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகின்றார். அவரைக் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அந்தக் கொலை நடந்தது என்பதைக் கண்டறிய முடியாமல் அம்மாநில காவல்துறை தடுமாறுகிறது. என்ன செய்யலாம்? என உயர் அதிகாரிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்துகிறார்கள்.

அப்போது உள்துறை அமைச்சர் சரத்பாபு, தமிழ்நாடு டிசிபி துரைசிங்கம் (சூர்யா) பற்றியும், அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகள் பற்றியும் சொல்கிறார். உடனே ஆந்திர அரசு துரைசிங்கத்தை வரவழைத்து அந்த வழக்கை விசாரணை செய்யும் பொறுப்பை ஒப்படைக்கிறது.

ஆந்திராவில் தாதாக்கள் யாராவது இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்யும் துரைசிங்கம், ரெட்டி என்ற தாதாவைக் குறி வைத்து காய் நகர்த்துகிறார். அப்போது ரெட்டிக்குப் பின்னால் விட்டல் என்ற ஆஸ்திரேலியத் தொழிலதிபர் ஒருவன் இருப்பது தெரிய வருகின்றது.

#TamilSchoolmychoice

விட்டல் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு, இந்தியாவில் சட்டவிரோத தொழில்களை செய்கிறான். அது என்ன? அதற்கும் கமிஷனரின் கொலைக்கும் என்ன சம்பந்தம்? என்பதை துரைசிங்கம் தனக்கே உரிய பாணியில் கண்டறிவது தான் ‘சிங்கம் 3’ படத்தின் கதை.

சொதப்பலான திரைக்கதை

Neetu Chandra‘சிங்கம் 2’ படத்தில் அவ்வளவு அழகாக திரைக்கதை அமைத்திருந்த இயக்குநர் ஹரி. ‘சிங்கம் 3’ படத்தில் இவ்வளவு மோசமாக சொதப்பியிருக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை. காட்சிகளில் வேகம் இருக்கும் அளவிற்கு சுவாரசியம் இல்லை.

படம் தொடங்கி 10, 15 நிமிடங்களில் சூர்யா வந்துவிடுகிறார். சூர்யாவின் அறிமுகக் காட்சியும், இரயில் நிலையத்தில் நடக்கும் ‘தெலுங்குப் பட பாணியிலான’ சண்டையும் பார்க்கும் போதே, இன்னும் 2 மணி நேரம் படம் எப்படி ஓடப் போகிறதோ? என்று நமக்கு அடிவயிற்றை பிசையத் தொடங்கிவிடுகின்றது.

திடீரென ஸ்ருதிஹாசன் கதைக்குள் வந்துவிட, இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தொலைத்துவிட்டு, சுமாரான கவர்ச்சிப் பாடல் ஒன்றை கூட ரசிக்கும் முயற்சியில் இறங்கி விடுகின்றோம். அந்தப் பாடலில் ஆடியிருப்பது ‘யாவரும் நலம்’ நீத்து சந்திரா என்பது கூடுதல் தகவல்.

காமெடி பண்ணலாமா? வேண்டாமா? என்ற யோசனையிலேயே ரோபோ ஷங்கர், கேமராவுக்கு குறுக்கும்,நெடுக்குமாக ஓடிவிட்டு காமெடி என்று காட்டும் சூரி, ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஏற்றிய எடையை இன்னமும் குறைக்காமல், மாடல் உடையில் டூயட்டுக்கு ஆடும் அனுஷ்கா, அவ்வப்போது கிராபிக்சில் பாயும் சிங்கம், இப்படியாக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, “துரைசிங்கம் சார்.. எப்ப சார் சார்ஜ் எடுப்பீங்க?” என்று ரசிகன் கதறாத குறையாக உட்கார்ந்திருக்கும் போது, சிங்கம்  தனது வேட்டையைத் துவங்குகிறார்.

Singam1அதிலிருந்து படம் முடியும் வரை.. விறுவிறுப்பு, ஆங்காங்கே தொய்வு, சம்பந்தமே இல்லாமல் ரெண்டு பாட்டு, மீண்டும் விறுவிறுப்பு எனப் படம் ஒருவழியாக முடிவடைகின்றது.

இதில் கொடுமை என்னவென்றால், சிபிஐ மூலமாக தமிழ்நாடு போலீசாக ஆந்திரா வந்து விசாரணை செய்யும் துரைசிங்கம், ரௌடிகளை ஓட ஓட அடிக்கிறார், என்கவுண்டர் செய்கிறார் எல்லாம் செய்தும் கூட, திடீரென தனக்கு ஆந்திர போலீசாக மாறும் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

சரி.. ஆந்திர போலீசாக மாறியவுடன் ஏதாவது வித்தியாசமாக செய்வார் என்று பார்த்தால், அதையே தான் திரும்ப செய்கிறார்.

பலம்

Singam2கண்டிப்பாக சூர்யாவின் நடிப்பு, உடல்மொழி, முகபாவனைகள், வசன உச்சரிப்பு. இவை தான் படத்தில் நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறது. கடந்த இரண்டு பாகத்தைப் போன்று மூன்றாம் பாகத்திலும் சூர்யா தனது பொறுப்பைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

விட்டல் கதாப்பாத்திரத்தில் தாகூர் அனுப் சிங்கின் நடிப்பு நன்றாக இருக்கிறது. நடிப்பை விட அவரது கட்டுமஸ்தான பாடிபில்டிங் உடற்கட்டு மிரட்டுகிறது. இமாம் அண்ணாச்சி ஒரு காட்சியில் வந்தாலும், சிரிக்க வைத்துவிடுகிறார்.

திரைக்கதை சொதப்பியிருந்தாலும் கூட, இயக்குநர் ஹரி இப்படம் மூலமாக வெளிக் கொண்டு வந்திருக்கும் ஒரு விசயம். இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கக் கூடியது. இந்திய மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

“சாக்லேட் சாப்பிட்டு, அந்தப் பேப்பரை பாக்கெட்டுல வச்சு, அப்புறமா குப்பத் தொட்டியில போடணும்னு இப்ப இருக்குற சின்னக் கொழந்தைக் கூட தெரியும் டா. தெருவுக்கு தெரு குப்பத் தொட்டி வச்சு இப்ப நாங்க சுத்தமாகிக்கிட்டே வரோம். ஒருநாள் உலக நாடுகளே திரும்பிப் பார்க்குற அளவுக்கு இந்தியா மாறும் டா” – இப்படியாக படத்தில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

“கங்காருவ வச்சிக்கிட்டு ஓட்டிக்கிட்டு இருக்குற நாட்டுல ஒண்டிப் பொழச்சிக்கிட்டு இருக்குற உனக்கே இவ்வளவு இருந்தா? சிங்கமும், புலியும் இருக்குற வளமான நாட்டுல இருக்குற எங்களுக்கு எவ்வளவு வேகம் இருக்கும்?” – இப்படியான குத்தலான வசனங்களும் உள்ளன.

Singam3முந்தைய பாகங்களில் உள்ள கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் தேவையான இடங்களில் மிக அழகாக இணைத்திருப்பது மிகவும் ரசிக்க வைக்கின்றது. அதுவும் ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் துரைசிங்கத்தின் பெருமை சொல்லும் அந்தக் காட்சி திரையரங்கில் கைதட்டல்களை அள்ளுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது என்றாலும் கூட, பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். மனதில் நிற்கும் படியான பாடல்கள் இல்லை.

பிரியனின் ஒளிப்பதிவு உண்மையில் பாராட்டப் பட வேண்டியது. பெரும்பாலான காட்சிகளில் பருந்துப் பார்வையிலேயே அமைந்திருப்பதில் இருந்து அவரது உழைப்பு நன்கு தெரிகிறது. தரையில் இருந்ததை விட, உயரத்தில் இருந்தே தான் பல காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவை அனைத்தும் தத்ரூபமாக வந்திருக்கிறது.

மொத்தத்தில், ‘சிங்கம் 3’ – சொதப்பிய திரைக்கதை, சூர்யாவும், வேகமும் மட்டுமே ஆறுதல்! ‘சிங்கம் 2’ படத்தைப் பார்த்துவிட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வெளியே வந்த உணர்வு இப்படத்தில் இல்லாமல் போனது ஏமாற்றமே!

-ஃபீனிக்ஸ்தாசன்