புதுடெல்லி, மார்ச் 21- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த 5 மத்திய மந்திரிகள் நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கடிதம் கொடுத்தனர்.
அப்போது மு.க.அழகிரி மட்டும் தனியாக சென்று பிரதமரை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மு.க.அழகிரியை மிகவும் பாசத்துடன் வரவேற்ற பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க.வின் முடிவு தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருவதாக கூறினார். பிறகு அவர் அழகிரியிடம் கொஞ்சம் பொறுங்கள். சோனியா வந்து கொண்டிருக்கிறார் என்றார்.
இதையடுத்து சில நிமிடங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா, அவர்கள் இருந்த அறைக்குள் வந்தார். பிறகு மன்மோகன்சிங், சோனியா, மு.க.அழகிரி மூவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.
2004-ம் ஆண்டு பிரதமர் பதவியை சோனியா ஏற்க மறுத்தபோது, மன்மோகன்சிங் பிரதமராக தேர்வானார். அப்போது மன்மோகன் சிங்கை போனில் தொடர்பு கொண்டு முதல் முதலில் கருணாநிதிதான் அழைப்பு விடுத்தார். இந்த தகவலை மு.க.அழகிரியிடம் கூறிய பிரதமர் மன்மோகன்சிங் இதுவரை ஒத்துழைத்தற்காக நன்றி தெரிவித்து கொண்டார்.
இதையடுத்து சோனியாவும் மு.க.அழகிரியிடம் சிறிது நேரம் மனம்விட்டு பேசியதாக தெரிகிறது. கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுப்பதற்கு முன்பு உங்கள் தந்தை என்னிடமோ, அல்லது பிரதமரிடமோ பேசி இருக்க வேண்டும். அப்படி செய்யாதது வருத்தம் அளிக்கிறது என்றாராம் சோனியா.