கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை தான் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வந்திருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை துன் மகாதீர் முகமது சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் கலந்தாலோசித்துள்ளார்.
வழக்கின் இடைவேளையின்போது அவர்கள் இருவரும் சந்தித்து எதிர்க்கட்சிக் கூட்டணி குறித்த விவகாரங்கள் குறித்துப் பேசினர். “நஜிப் பதவி விலகிச் செல்ல வேண்டும்” என்ற கொள்கையில் தாங்கள் இருவரும் உறுதியான இணக்கம் கண்டுள்ளதாகவும் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது மகாதீர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது மகாதீர் அன்வாரின் மகள் நுருல் இசா அருகில் அமர்ந்திருந்தார்.
வழக்கு தொடங்குவதற்கு முன்பாக பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினும் அன்வாரைச் சந்தித்தார்.
அன்வாரைச் சந்திக்க நீதிமன்றம் வரும் மகாதீர் (படம்: நன்றி – பெபாஸ் அன்வார் – Bebas Anwar – முகநூல் பக்கம்)
வழக்கைச் சற்று நேரம் ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்த காரணத்தால், நீதிமன்றத்தில் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த மகாதீரை நோக்கிச் சென்ற அன்வார் அவருடன் கைகுலுக்கிவிட்டு அளவளாவினார். ஆனால் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என அன்வாரைப் பாதுகாத்த சிறைக் காவலர்கள் தடுத்து விட்டனர்.
“பாஸ் கட்சியுடன் நாங்கள் இன்னும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும் எதிர்க்கட்சிக் கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் பெர்சாத்து கட்சியும் இணையும்” என்றும் மகாதீர் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.