சென்னை – நேற்று சனிக்கிழமை சென்னையில் ஆளுநர் வித்யாசகர் ராவைச் சந்தித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி, நாளைக்குள் ஆளுநர், தமிழக முதல்வர் விவகாரத்தில் முடிவெடுக்காவிட்டால், வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார்.
நேற்று தமிழக ஆளுநருடன் சுப்ரமணிய சுவாமி சந்திப்பு நடத்தியபோது…
சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசும் பேரம் நடைபெறக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்திய சாசனத்தின் விதி 32-இன்படி உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கைத் தொடர முடியும் என்றும் சுப்ரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காலமாகி விட்டார் என்பதைக் காரணம் காட்டி, வழக்கிலிருந்து ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து நீக்க வேண்டுமென கர்நாடக அரசு விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்திருப்பதாகவும், இதன் காரணமாக, சொத்து குவிப்பு வழக்கு மறு ஆய்வு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படுவதில் மேலும் தாமதமாகலாம் என்றும் சுவாமி சுட்டிக் காட்டியிருக்கிறார்.
சுப்ரமணியம் சுவாமி திடீரென சசிகலாவுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்திருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது என்பதோடு, பாஜக தலைவர்களின் மத்தியிலும் சில சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் சரியாகத்தான் செயல்படுகின்றார் என்ற தோரணையில் பொன்.இராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஆகியோர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், அதற்கு நேர் எதிரான திசையில் சுப்ரமணியம் சுவாமி நடவடிக்கையில் இறங்கியிருப்பதால், அவரது செயல் பாஜக தலைமைத்துவத்தின் ஒப்புதலோடு கூடிய செயல் அல்ல என தமிழிசை மறுத்துள்ளார்.
-செல்லியல் தொகுப்பு