கோலாலம்பூர் – மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜோங் நம்மின் (வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் ) உடலில் பிரேதப் பரிசோதனை செய்வதைத் தடுக்க வடகொரிய அதிகாரிகள் முயற்சி செய்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
எனினும், மலேசியக் காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, நேற்று புதன்கிழமை கோலாலம்பூர் மருத்துவமனையில் கிம் ஜோங் நம்மின் உடலில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது.
இதனை சிப்பாங் ஓசிபிடி துணை ஆணையர் அப்துல் அசிஸ் அலியும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
நேற்று காலை முதல் மலேசியாவிற்கான வடகொரிய தூதர் காங் சோல் மற்றும் இன்னும் சில முக்கிய அதிகாரிகள், கோலாலம்பூர் மருத்துவமனையிலேயே காத்திருந்தனர்.
அவர்கள் மலேசிய அதிகாரிகளுடன் பேசி, கிம் ஜோங் நம் உடலில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும், வடகொரியாவிற்கே உடலை அனுப்பி வைக்கும் படியும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
எனினும், மலேசிய அதிகாரிகள் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.