சியோல் – தவறான அறிக்கைகள் சமர்ப்பித்து, அதிபர் கிம் ஜோங் உன்னை ஆத்திரமூட்டிய, பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 5 உயர் அதிகாரிகளை, பீரங்கியின் மூலமாக வடகொரியா சுட்டுக் கொன்றதாக தென்கொரியாவின் உளவுத்துறை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.
மலேசியாவில் வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்து வரும் அதிகாரிகளிடம், தேசியப் புலனாய்வு சேவையகம் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை நடத்தி, 5 உயர் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலைத் தெரிவித்திருக்கிறது.
மேலும், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜோங் நம், விஷம் தேய்த்துக் கொலை செய்யப்பட்டது கூட, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் உத்தரவின் பேரில் தான் நடந்ததாகவும் தென்கொரியா கூறுகின்றது.
தற்போது வடகொரியாவால் கொல்லப்பட்ட 5 உயர் அதிகாரிகளும் என்ன காரணத்திற்காகக் கொல்லப்பட்டனர் என்பதை தேசிய புலனாய்வு சேவையகம் தெரிவிக்கவில்லை. அதோடு எப்படி தங்களுக்கு இந்தத் தகவல் கிடைத்தது என்பதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் படி, வடகொரியாவின் பாதுகாப்புத் தலைவர் கிம் வோங் ஹாங் சுட்டுக் கொல்லப்பட்டார் . அவர் கொல்லப்பட்டதை வடகொரியா பொதுவில் அறிவிக்கவில்லை என்றாலும், உளவுத்துறையின் மூலமாக தகவல்கள் உலகிற்குத் தெரிய வந்தது.
கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில், கிம் ஜோங் உன் அதிபராகப் பதவி ஏற்றதில் இருந்து, மிகப் பெரிய அளவில் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.