லண்டன் – வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க, கிம் ஜோங் நம் கொலையில், பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் விஎக்ஸ் நெர்வ் ஏஜெண்ட் என்ற இரசாயனம் குறித்த ஆதாரங்களை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு மலேசியாவை பிரிட்டன் வலியுறுத்துகிறது.
நேற்று திங்கட்கிழமை பிரிட்டன் தூதர் மேத்திவ் ரிகிராப்ட் கூறுகையில், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமானநிலையத்தில், கிம் ஜோங் நம் மீது நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதல் பற்றிய ஆதாரங்கள், ஹாக்கை அடிப்படையாகக் கொண்ட இரசாயன ஆயுதங்களுக்கு எதிரான அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“அவர்களுக்கு ஆதாரங்கள் கிடைத்தால், அதை அவர்கள் ஓபிசிடபிள்யூ –விற்கும், பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் அனுப்புவார்கள். அதை அவர்கள் செய்து முடித்தவுடன் நாங்கள் அதற்கு அடுத்த நடவடிக்கையில் இறங்குவோம்” என்று ரிகிராப்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில், மலேசியா உட்பட எந்த ஒரு நாடும் தக்க ஆதாரங்கள் இருந்தால், உடனடியாக சமர்ப்பிக்கும் படியும் ரிகிராப்ட் வலியுறுத்தினார்.