சென்னை – எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் – தமிழகமே பரபரப்பாக எதிர்பார்க்கும் – ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றே தன்னை வேட்பாளராக அறிவித்து தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளார் தீபா.
“ஓ.பன்னீர் செல்வம் அணியினர் என்னை ஆதரித்தால் வரவேற்பேன்” என்றும் தீபா அதிரடியாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து ஓபிஎஸ் தற்போது இன்னொரு அரசியல் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
முதல்வர் பதவியை விட்டு விலகியதும் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, தீபாவை வீட்டுக்கு அழைத்து ஆரத்தி எடுத்து வரவேற்றவர் ஓபிஎஸ். இருவரும் இணைந்து போராடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சொந்தமாக ‘எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை’ என்ற பெயரில் அரசியல் இயக்கம் ஒன்றைத் தனியாகத் தொடங்கினார் தீபா.
இப்போதோ ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என அறிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தீபாவையே ஆர்.கே.நகரில் ஆதரிப்பதா, அல்லது தங்களின் அணி சார்பில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதா என்ற குழப்பம் இனி ஓபிஎஸ் அணியை ஆக்கிரமிக்கும். அவ்வாறு ஓபிஎஸ் அணியில் ஒருவர் நிறுத்தப்பட்டால், தீபாவுக்கும் அவர்களுக்கும் இடையிலான மோதல்கள் வலுக்கும் என்பதோடு, ஆதரவு வாக்குகளும் பிரியும்.
அதிமுக-திமுக-தீபா இடையிலான பரபரப்பான தேர்தலாக – தமிழக அரசியல் களத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் சம்பவமாக – ஆர்.கே.நகர் தொகுதி முடிவுகள் அமையும்!
-செல்லியல் தொகுப்பு