சியோல் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி மலேசியாவில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரது மகனான கிம் ஹான் சோலும் அடுத்ததாகக் கொல்லப்படலாம் என வடகொரிய தூதரகங்களில் பணியாற்றிய முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் கூறுவதாக ஜப்பானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லண்டனில் உள்ள வடகொரிய தூதரகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான தே யோங் ஹோ, சியோலில் ஜப்பான் ஊடகங்களைச் சந்தித்துப் பேசுகையில், “இவற்றிற்கெல்லாம் பின்னால், ஒரு தலைவனாக தனது ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் கிம் ஜோங் உன்னின் ஆசை இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
கிம் ஜோங் நம்மின் மகன் கிம் ஹான் சோல் பேசுவதாகக் காணொளி ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை, கியோலிமா சிவில் டிபன்ஸ் என்ற குழுவினரின் யூடியூப் பக்கத்தில் யூடியூப்பில் வெளியானது.அதில் தனது தந்தை கொல்லப்பட்டதாக கிம் ஹான் சோல் கூறுகிறார்.
இதனிடையே, அக்காணொளியில் இருப்பது கிம் ஹான் சோல் தான் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில், வடகொரியா அக்காணொளி குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.
இதனை வைத்துத் தான் கிம் ஹான் சோல் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருத்து நிலவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.