கோலாலம்பூர் – எம்எச்370 விமானம் மாயமாகி கடந்த புதன்கிழமையோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
விபத்து, கடத்தல், தீவிரவாதச் செயல், இலுமினாட்டிகள் என்ற இயக்கத்தினரின் செயல் என எம்எச்370 விமானத்தைப் பற்றி நூற்றுக்கணக்கான கூற்றுகளோடு, பல மர்மமான தகவல்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தற்போது புதிதாக ஒரு மர்மமும் அதனுடன் சேர்ந்திருக்கிறது.
அதாவது, கடந்த 2014-ம் ஆண்டு, மார்ச் 8-ம் தேதி, கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட எம்எச்370 விமானத்தில் மொத்தம் 227 பயணிகள் இருந்ததாகத் தான் இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
ஆனால், உண்மையில் மொத்தம் 228 பயணிகள் இருந்ததாக, இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி டெய்லி எக்ஸ்பிரஸ்’ என்ற செய்தி நிறுவனம் நேற்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கிறது. அவ்விமானத்தின் கார்கோ (சரக்கு) பட்டியலின் படி மொத்தம் 228 பயணிகள் இருந்திருப்பதை டெய்லி எக்ஸ்பிரஸ் சுட்டிக் காட்டியிருக்கிறது.
எனினும், எம்எச்370 பாதுகாப்பு விசாரணைக் குழுவைச் சேர்ந்த பேச்சாளர், “அந்த வித்தியாசம் பற்றி எங்களுக்குத் தெரியும். ஆனால் உண்மையில் 227 பயணிகள் தான் விமானத்தில் இருந்தனர். கணினி மூலமாகப் பரிமாற்றம் செய்யப்படும் லோட் ஷீட் (Load Sheet) தகவலுக்கும், உண்மையான கணக்கிற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். காரணம் அதில் கடைசி நேர மாற்றங்கள் இருக்காது” என்று தங்களுக்கு விளக்கமளித்ததாகவும் டெய்லி எக்ஸ்பிரஸ் கூறுகின்றது.
எம்எச்370 விமானத்தில் இருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வத் தகவலின் படி, 227 பயணிகளும், 12 விமானப் பணியாளர்களுமாக மொத்தம் 239 பேர் இருந்திருக்கின்றனர்.
ஆனால், எம்எச்370 விமானம் மாயமானதில் இருந்து, அது பற்றி விசாரணை நடத்தி வரும் ஆண்ட்ரி மில்னே என்ற தன்னார்வ புலன்விசாரணையாளர், அந்த அதிகாரப்பூர்வ கணக்கை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.
விமானத்தில் கணக்கில் வராத ஒரு பயணியும் இருந்திருக்கிறார் என்று ஆண்ட்ரி டெய்லி எக்ஸ்பிரசிடம் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.
“விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் மொத்தம் 228 இருக்கைகள் விற்பனையாகியிருக்கின்றன. அந்த 228-ல் பெற்றோர்களுடன் இருந்த இரு குழந்தைகள் சேர்க்கப்படவில்லை”
“அதோடு, 4 பயணிகள் விமானத்தில் ஏறவில்லை என்றும் கூறப்படுகின்றது. அதன்படி பார்த்தால், இறுதியாக மொத்தம் 224 இருக்கைகளில் தான் பயணிகள் இருந்திருக்கிறார்கள்”
“அந்த இரு குழந்தைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மொத்தம் 226 பயணிகள். இப்போது 12 பணியாளர்களையும் சேர்த்தால், மொத்தம் 238 பேர் தான் வருகின்றார்கள். ஆனால் அதிகாரப்பூர்வ அறிக்கை 239 பயணிகள் என்று கூறுகின்றது.”
“அப்படியானால், கணக்கில் வராத யாரோ ஒரு ‘கூடுதல்’ நபர் எம்எச்370 விமானத்தில் கடைசி நேரத்தில் இருந்திருக்கிறார்” என்று ஆண்ட்ரி கூறுகின்றார்.
அந்த ‘நபர்’ ஒருவேளை கடத்தல்காரனாகவோ அல்லது விமானத்தை முற்றிலும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தெரிந்த நபராகவோ இருந்திருக்கலாம் என்றும் ஆண்ட்ரி தனது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.