வாஷிங்டன் – வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை தகர்க்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இராணுவ ஆலோசகர்களுக்கு சில ஆலோசனைப் பட்டியலை வழங்கி தயாராக இருக்கும் படி உத்தரவிட்டிருக்கிறார்.
இராணுவ ஆலோசகர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் எச்.ஆர்.எம்சி மாஸ்டர், இதனை தனது தலைமை கமாண்டரிடம் உறுதிப்படுத்தியிருப்பதோடு, வடகொரியாவை நோக்கி அமெரிக்க போர் கப்பல்களையும் அனுப்பியிருக்கிறார் என மிரர் செய்தி நிறுவனம் கூறுகின்றது.
டிரம்ப் அளித்துள்ள உத்தரவுகளில், கூட்டாக சிறப்புப் படைகள் மூலம் சோதனை நடத்துதல் மற்றும் முன் கூடிய ஏவுகணைத் தாக்குதல் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை அமெரிக்கப் படைகள் நெருங்க முடியாமல் இருப்பதற்குக் காரணம், வடகொரியத் தலைநகரில் இருக்கும் கடினமான சுரங்கப்பாதை அமைப்புகள் தான் எனக் கூறப்படுகின்றது.
மேலும், அந்த சுரங்கப்பாதைகளில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் விமானத் தளங்கள் இருப்பதாக நம்பப்படும் நிலையில், அதனை அமெரிக்கப் போர் விமானங்கள் கண்டறிவது கடினம் என்றும் நம்பப்படுகின்றது.
இதனிடையே, யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற அமெரிக்கப் போர் கப்பலை, ஜப்பான் கடற்பகுதிக்கு மீண்டும் அனுப்பும் முடிவிற்குக் காரணம், வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயல்பாடுகள் தான் என்று எம்சி மாஸ்டர் விளக்கமளித்திருக்கிறார்.
இது குறித்து எம்சி மாஸ்டர், ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இதை கவனமாகத் தான் செய்ய வேண்டும்? இல்லையா?, இதற்கு முந்தைய அதிபர்கள் மற்றும் தற்போது டிரம்ப் ஆகியோர் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது (வடகொரியாவின் செயல்பாடுகள்) என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதற்காகத் தான் தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்களைத் தயாராக இருக்கும் படி, டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக எம்சி மாஸ்டர் குறிப்பிட்டிருக்கிறார்.