கோலாலம்பூர் – கடந்த வாரம் மாயமான பீட்டர் சோங் என்ற போராட்டவாதி, எம்எச்370 விமானத்தின் கேப்டன் சஹாரி அகமட் ஷாவின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்திருக்கிறது.
எம்எச்370 விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதற்கு கேப்டன் சஹாரி காரணமாக இருக்கலாம் என ஊடகங்களில் கருத்துகள் வெளியான போதெல்லாம், அதை மிகக் கடுமையாக எதிர்த்தவர் சோங்.
மேலும், அவ்விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் நலனுக்காக நடத்தப்பட்ட பல்வேறு பிரார்த்தனைகளிலும் சோங் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி, இரவு, வீட்டை விட்டு வெளியேறிய சோங், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும், அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் அவரது குடும்பத்தினர், கடந்த சனிக்கிழமை காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர்.
இதனிடையே, கடந்த மார்ச் 31-ம் தேதி, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், தன்னிடம் வந்து “இப்போதெல்லாம் நிறைய பேர் திடீரென மாயமாகிவிடுகிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறியதாக சோங் தனது பேஸ்புக்கில் விவரித்திருந்தார்.
இப்பதிவு செய்யப்பட்டு, அடுத்த 5 நாட்களில் சோங், மாயமாகியிருப்பது அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் முதல், அம்ரி சே மாட், ஆயர் ஜோசுவா ஹிம்லி மற்றும் அவரது மனைவி ருத், ஆயர் ரேமண்ட் கோ என தொடர்ச்சியாகப் பலர் மாயமாகி, தேடப்பட்டு வரும் நிலையில், தற்போது சோங்கும் மாயமாகியிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆயர் ரேமண்ட் கோவுக்காக நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி ஏந்தும் பிரார்த்தனையில் கூட, தற்போது மாயமாகியிருக்கும் சோங் கலந்து கொண்டிருக்கிறார் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.