மலாக்கா – இங்குள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் (படம்) இன்று சனிக்கிழமை காலமானார்.
மலாக்கா வட்டாரப் பொதுமக்களிடையே பிரபலமான அவர் இந்து சமய ஆகம விவகாரங்களில் ஆழ்ந்த புலமையும் ஞானமும் கொண்டிருந்தவர் என அவரை அறிந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை 14 மே 2017-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:-
No.14, Jalan Kota Laksamana 2/7,
Taman Kota Laksamana 2,
75200 Melaka
டாக்டர் சுப்ராவின் அனுதாபம்
இதற்கிடையில் ஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் மறைவு குறித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் “இன்று இறைவனடி சேர்ந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா திரு இராமசந்திரன் குருக்கள் அவர்களின் மறைவானது மனத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. ஐயா அவர்கள் இந்நாட்டில் பல ஆலயக் கட்டுமானங்களுக்கு ஆலோசகராகவும், இந்நாட்டில் உள்ளவர்களுக்கு ஆலய அர்ச்சனை முறையைக் கற்பிப்பவராகவும், இந்நாட்டில் இந்து சங்கம் வழியாகவும் சுய முயற்சியின் அடிப்படையிலும் மதப் பிரச்சாரங்களை மேற்கொண்டு சமுதாயத்தினரிடையே சமய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவராகவும் பல ஆண்டுக் காலமாகச் சேவையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்திருக்கின்றார்.
மஇகா தேசியத் தலைவருமான டாக்டர் சுப்ரா இன்று இராமச்சந்திர குருக்கள் மறைவு குறித்து விடுத்த அனுதாபச் செய்தியில் “ஐயாவின் மறைவானது இந்நாட்டில் வாழும் இந்திய பெருமக்களுக்குப் பெரிய இழப்பாகும். அவ்வகையில், ஐயாவைப் பிரிந்து துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு ஐயாவின் ஆத்மா அமைதியடைய இறைவனையும் இறைஞ்சுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.