Home Featured நாடு இருமொழித் திட்டம் – “தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் உள்ளக்குமுறல்”

இருமொழித் திட்டம் – “தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் உள்ளக்குமுறல்”

1275
0
SHARE
Ad

dlp-dual-language-logo_full

கோலாலம்பூர் – டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதற்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. இன்று வெள்ளிக்கிழமை மே 19-ஆம் தேதி புத்ரா ஜெயாவில் உள்ள கல்வி அமைச்சின் முன் ஒரு குழுவினர் அமைதிப் பேரணி நடத்துவதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், சமூக வலைத் தளங்களில் உலா வருகிறது. கீழ்க்காணும் கடிதம்!

#TamilSchoolmychoice

“தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் உள்ளக்குமுறல்” என்ற தலைப்பிட்டு பகிரப்படும் இந்தக் கடிதத்தை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. இருப்பினும் அதில் கண்டுள்ள தகவல்கள்  காரணமாகவே இதனை செல்லியலில் பதிவேற்றம் செய்கின்றோம்.

இதில் கண்டுள்ள தகவல்களை செல்லியல் உறுதிப்படுத்தவோ, ஆதரிக்கவோ, இல்லை என்பதையும் இங்கே தெளிவுபடுத்திக் கொள்கின்றோம்.

இனி அந்தக் கடிதம்!

“தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் உள்ளக்குமுறல்”

தமிழா வாழ்க! தமிழால் வெல்க!

நட்புறவுகளுக்கு வணக்கம். பெயர் சொல்ல இயலாத ஓர் ஆசிரியனின் மனக்குமுறல், அதற்கு முன்பதாக, இருமொழித்திட்ட (டி.எல்.பி) எதிர்ப்புப் பேரணியை எந்தவொரு சுயநோக்கமும் இன்றி நடத்த முன்வந்த சகோதர உறவுகளுக்கச் சிரந்தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியன், இதோடு நான்கு பள்ளியாகிவிட்டது. மூன்று தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகள், ஒரு நகர்ப்புறப் பள்ளி, ஒட்டுமொத்தமாக என்னைச் சுற்றியுள்ள ஆசிரிய வர்க்கத்தின் கருத்து இருமொழித்திட்டத்திற்கு எதிர்ப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அரசுக்குக் கட்டுப்பட்டுள்ளோம். நேரடியாக எங்களின் எதிர்ப்பை வெளிக்காட்ட இயலவில்லை என்பதுதான் உண்மை!

வாயை மூடிக் கொண்டு உள்ளுக்குள் குமுறுவதைவிட எழுத்தாகப் பகிரலாம் என்பதற்காகத்தான் இந்தச் சிற்றுரை! டி.எல்.பி-யைப் பற்றி சகோதர உறவுகள் அவ்வப்போது விடயங்களைப் பகிர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். கற்றல் கற்பித்தலில் டி.எல்.பி முழுமையாக அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும் காலம் வெகு அருகாமையில்தான் இருக்கின்றது. அமல்படுத்தப்பட்டால் 200 ஆண்டு மலேசிய தமிழ்க்கல்வி அடுத்த நூற்றாண்டைத் தொடுவதில் மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்கும். இதனால், தமிழ் அழியும்! தமிழ்ப்பள்ளி அழியும்! தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அழிக்கப்படுவார்கள்! அதில் நானும் ஒருவன்.

நட்புறவுகளே நாம் படித்தப் பாடத்திட்டம் இப்பொழுது கிடையாது. மாணவர்களுக்குக் கடினமான பல கூறுகள் ஒன்றாம் ஆண்டிலேயே கற்பிக்கப்படுகின்றன. பூமி, அடிப்படை கட்டுமானம், பொருளியல் போன்றவற்றை ஒன்றாம் ஆண்டு அறிவியலில் மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்றாம் ஆண்டில் பல அச்சங்களுடன் பள்ளியில் கால் பதிக்கும் இந்த மழலைகள், தாய்மொழியில் பேசுவதற்கும் எழுதுவதற்குமே பல சிக்கல்களை எதிர்நோக்கும் பட்சத்தில், அவர்களிடம்தான் உங்கள் வீரத்தை காட்டுவீர்களா! அவர்களிடம்தான் உங்கள் ஆங்கில புலமையைப் புகுத்துவீர்களா?

ஐயா இன்றைய நிலையில் (பாடத்திட்டத்திற்கு இணங்க) அனைத்துப் பாடங்களும் சிரமமாகத்தான் இருக்கின்றன. 2017-இல் ஒன்றாம் ஆண்டு மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் (semakan) அடிப்படையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீங்கள் ஆங்கிலத்தில் அறிவியல், கணிதப் பாடங்களைப் போதித்தால் அந்த மாணாக்கனுக்குப் புரியாது! வகுப்பில் அமர்ந்து பாருங்கள் இருமொழித் திட்டம் அமல்படுத்தப்பட்டும் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மொழியாக்க வகுப்புதான் நடத்துகின்றனர்! இதுதான் ஐயா உண்மை! இந்த மொழியாக்கத்திற்கான காரணம் மாணவர்களுக்குச் சரியான புரிதல் இல்லை. இதனால், நேர விரயம் ஏற்படுகின்றது! தமிழில் போதித்தபோது வலுவாக இருந்த கற்றல் கற்பித்தல் இப்பொழுது வலுவிழந்து மாணவர்களைச் சிதைக்கிறது.

டி.எல்.பி-க்கு ஆதரவு தெரிவிக்கும் சகோதர உறவுகளே, உங்கள் பகுத்தறிவு எங்கே? சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள். உங்களை இப்படிதான் ஆங்கிலத்தில் படிக்கச் சொல்லி உங்கள் தாய் தந்தையர்கள் சிரமப்படுத்தினார்களா? நாங்கள் ஆசிரியர்கள். நிச்சயமாக நாங்கள் ஆங்கிலத்திற்கு எதிரி கிடையாது! உலக மொழியை எங்கள் குழந்தைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் எங்களுக்கும் மிகப் பெரிய பங்கு இருக்கின்றது. ஆனால் டி-எல்-பி அதற்கான பாதை கிடையாது. தாமதம் வேண்டாம்! சிந்தியுங்கள்! கரம் சேர்வோம்!

தமிழ்ப்பள்ளிகளுக்காக, தமிழ்க்கல்விக்காக! நன்றி!