கோலாலம்பூர் – மஇகாவின் தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை:
“நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பெரும்பான்மை இந்தியர் வாக்குகளை தேசிய முன்னணிக்கு ஆதரவாகப் பெற்றுத் தருவதில், எத்தனையோ சவால்களுக்கு இடையில் முன்னணியில் இருந்து பாடுபட்டு, அதில் வெற்றியும் அடைந்து வரும் கட்சி மஇகாதான்.
இந்த நோக்கத்தில் மஇகா சிறப்புடன் பாடுபட்டு வெற்றி பெற்று வந்திருப்பதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று அதன் கட்டுக் கோப்பான உட்கட்சி கட்டமைப்பு முறையும், உறுப்பினர்களும்தான்.
அதே வேளையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் மஇகாவின் தேசியத் தலைவர்களாக இருந்தவர்களின் தலைமைத்துவ ஆற்றல், திறன்கள், மக்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கை ஆகியவைதான் தேசிய முன்னணியை நோக்கி இந்தியர் வாக்குகள் திரும்புவதற்கு காரணமாக அமைந்தது என்பதையும், அதற்காக மஇகா ஓர் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்பதையும் நாம் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.
ஆனால் இப்போதெல்லாம், எங்கிருந்தோ திடீரென்று முளைப்பவர்கள், யார் இவர் என்றே தெரியாதவர்கள், முகம் காட்ட முன்வராதவர்கள் – இவர்களெல்லாம், இதுவரை அறியப்படாத, கேள்விப்படாத இயக்கங்களின் பெயரைத் தங்களுக்குப் பின்னால் போட்டுக் கொண்டு, அரசியல் ஆய்வாளர்கள் என்ற போர்வையில் சில புதிய, புதிய அரசியல் சித்தாந்தங்களை ஒவ்வொரு நாளும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
தேசிய முன்னணிக்கு ஆதரவாக இந்தியர்கள் வாக்களிப்பார்கள் – ஆனால், அவர்கள் நஜிப்புக்காகத்தான் வாக்களிப்பார்கள் – மாறாக, மஇகாவுக்காகவோ, அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்துக்காகவோ வாக்களிக்க மாட்டார்கள் என்ற புதிய அரசியல் சித்தாந்தத்தை இவர்கள் இப்போது புதிதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் தங்களின் சொந்த அரசியல் விருப்பு வெறுப்புகள் காரணமாகவும், மஇகா மீதும் அதன் தலைவர் மீதும் கொண்டிருக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகைமை காரணமாகவும் இவ்வாறு புதிது புதிதாக கண்டுபிடித்து திரித்து எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜூன் 7-ஆம் தேதி தைப்பிங் தாமான் காயா தமிழ்ப் பள்ளி கட்டுமான வளாகத்திற்கு வருகை தந்த பிரதமருடன் டாக்டர் சுப்ரா…
வேண்டுமென்றே குற்றமும் குறையும் கண்டுபிடிக்க முனையும், பிரிக்க முடியாத சில விஷயங்களைப் பிரித்துப் பார்த்து ஆராய முனையும் ஒரு சிலரின் சிண்டுமுடிக்கும் கைங்கரியங்கள்தான் இதுபோன்ற எழுத்துக்கள்!
ஒரு நாட்டின் பிரதமர் என்பவர் அனைத்து குடிமக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டிய கடப்பாடு கொண்டவர் ஆவார். எனவே, ஒரு பிரதமர் நாட்டின் மக்களின், குறிப்பாக இந்திய சமுதாயத்தின் தேவைகளை அறிந்து தீர்த்து வைக்க முன்வரும்போது அது அவரது கடமையும், கடப்பாடும் ஆகும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
அதே வேளையில், மஇகா என்பது முழுக்க முழுக்க இந்தியர்களைப் பிரதிநிதித்து தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் கட்சி. அந்தக் கட்சிக்கும் அதன் தேசியத் தலைவருக்கும் அதே போன்று இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கடப்பாடு இருக்கிறது. அதனால்தான் தேசியத் தலைவர் என்ற பொறுப்பும் அரசாங்க ஆட்சியில் பங்கும், அமைச்சர் என்ற கடமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
எனவே, இந்தியர்களின் சமுதாயப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பிரதமரும், மஇகா தேசியத் தலைவர் துரிதமாகச் செயல்பட்டு வருகின்றார். மேலும் அவரது கடமைகளையும், கடப்பாடுகளையும் முறையாக நிறைவேற்றி வருகிறார் என்பதுதான் இன்றைய அரசியலின் உண்மையான நிலவரம். குறிப்பாக, கடந்த 2010ஆம் ஆண்டு ம.இ.காவைப் பிரதிநிதித்து அமைச்சரவையில் ஒரே இந்திய அமைச்சராக அமைச்சரவையில் வீற்றிருந்த டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அவர்களின் விண்ணப்பத்திற்கும் பரிந்துரைக்கும் செவி சாய்க்கும் வண்ணமாகவே இன்று நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் சிறந்த வகையில் மேம்பாடு கண்டுள்ளதோடு, 2010ஆம் ஆண்டுத் தொடங்கி இன்று வரை ஏறக்குறைய 80 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
இன்று நேற்றல்ல – கடந்த 60 ஆண்டுகளாக மஇகாவும், தேசிய முன்னணியும், பிரதமர்களாக இருந்தவர்களும் இணைந்து இதே போன்று பணியாற்றி வந்திருக்கும் வரலாற்றைக் கொண்ட நாட்டில் – நஜிப் பதவிக்கு வந்த பின்னர் இந்தியர்களுக்கு உதவும் திட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றார், அதிகரித்திருக்கின்றார் என்பதுதான் உண்மை.
அதே வேளையில் சமீபத்தில் அறிவித்த இந்தியர்களுக்கான வியூகத் திட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவரே தேசியத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம்தான். இதனை நஜிப்பே ஒப்புக் கொண்டு மேடையிலேயே பகிரங்கமாக அறிவித்தார் “இந்தியர் புளுபிரிண்ட் தயாராவதற்கு முன்னின்று பாடுபட்டவர் சுப்ராதான்” – என்று!
மேலும், அதைச் செயல்படுத்த, களத்தில் இறங்கி பணியாற்றத் தயாராக இருப்பவர்கள், ஆற்றல் கொண்டவர்கள் மஇகாவினர்தான். இந்தியர்களின் கனவுகளை நனவுகளாக்கும் செயல் திறனும், சேவைத்திறனும், கட்டுக் கோப்பான கட்டமைப்பும் கொண்ட ஒரே கட்சி மஇகாதான்.
மஇகாவை ஒன்றுபடுத்திய டாக்டர் சுப்ரா….
நேற்று வியாழக்கிழமை (8 ஜூன் 2017) கோலாலம்பூர் ஜாலான் டூத்தா தேசிய பதிவிலாகாவில் நடைபெற்ற மெகா மை டஃப்தார் ஆவணப் பதிவு நடவடிக்கையின்போது நேரில் வருகை தந்த டாக்டர் சுப்ரா…
இன்றைக்கு மஇகா கட்சியையும், அதன் உறுப்பினர்களையும், கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அவர்கள் அனைவரும் ஒரே குரலாக, ஒருமித்த உணர்வோடு, ஒற்றுமையாகப் போராட, அவர்களைக் கூர்மைப் படுத்தி வைத்திருப்பது டாக்டர் சுப்ரா என்ற தலைவரின் தலைமைத்துவ ஆற்றலும், உழைப்பும், தன்னலமற்ற சேவைத் திறனும்தான்.
தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையால்தான் இன்று கட்சியும் சமுதாயமும் அவர் பின்னால் ஒருங்கே திரண்டு நிற்கிறது.
எனவே, நஜிப்பின் விருப்பம், இந்தியர்களுக்கு உதவும் அவரது வியூகச் செயல் திட்டங்கள் – இவற்றை அமுலாக்க – மஇகா மற்றும் அதன் தேசியத் தலைவரின் ஆற்றல் – என இவை இரண்டும் இணைந்து பெரும் பக்கபலமாக இருக்கின்றன.
இதனால்தான் இன்று இந்தியர்களையும் அவர்களின் ஆதரவையும் தேசிய முன்னணி பக்கம் திசை திருப்பியிருக்கின்றது.
அதை ஒப்புக் கொள்ளாமல், இந்த இரு தரப்புகளையும் பிரித்துப் பார்ப்பதும், இவரால்தான் வாக்குகள் வரும் – அவரால் வராது என அரசியல் பேசுவதும், கேலிக் கூத்தான ஒன்று என்பதோடு, வேண்டுமென்றே நஜிப்-டாக்டர் சுப்ரா-மஇகா நல்லுறவில் நஞ்சைக் கலக்க முற்படும் வஞ்சக நோக்கம் கொண்ட செயலாகும். இதற்குப் பல உதாரணங்களை நம்மால் கூற முடியும்.
புளுபிரிண்ட் ஒன்றே போதும்
இந்தியர் புளுபிரிண்ட் ஏப்ரல் 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டபோது பிரதமருடன்…
முதலாவதாக, இன்று மலேசிய இந்தியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரும் மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் வடிவாக்கத்திற்கு பெரிதும் பாடுபட்டவர் – அதற்கான உள்ளடக்கங்களைத் தயாரித்தவர் அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள்தான்.
அதற்கேற்ப, சுப்ராவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் புளுபிரிண்ட் அமுலாக்கக் குழுவிற்கு தலைவராகவும் சுப்ராவை நஜிப் நியமித்திருக்கிறார்.
டாக்டர் சுப்ராவின் எளிமை, எளிதான அணுகுமுறை, அறிவாற்றல், கல்வித் தகுதி, உழைப்பு, அவரது சிறப்பான அமைச்சுப் பணிகள் இப்படி எல்லாம் சேர்ந்துதான் அவரை மஇகாவின் ஏகமனதான தலைவராக்கியிருக்கிறது. இந்திய சமுதாயத்திற்கு மஇகாவின் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதற்கு டாக்டர் சுப்ரா மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும்தான் காரணம்!
இவ்வளவுக்குப் பின்னரும் ‘சுப்ராவுக்கு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவில்லை’ என ‘பன்னீர்’ துளிகள் என நினைத்து, வெந்நீர் எழுத்துகளைக் கொட்ட நினைக்கிறார்கள் சிலர்.
பிரதமர் நஜிப்பும் அவரது ஆற்றல் உணர்ந்துதான் இந்தியர்களுக்கான செயல் திட்டங்களையும், புளுபிரண்ட் என்ற திட்டத்தின் அமுலாக்கப் பொறுப்பையும் டாக்டர் சுப்ரா வசம் ஒப்படைத்திருக்கின்றார்.
அதே வேளையில் கடந்த காலப் பிரதமர்களைப் போல் அல்லாது, இந்திய சமுதாயத்தை உயர்த்துவதற்காக பல பாரம்பரிய, அரசாங்க விதிமுறைகளைப் புறந்தள்ளி நஜிப் செயலாற்றி வருவதால், அவர் மீதான நம்பிக்கையும் இந்தியர்களுக்கு அதிகரித்திருக்கின்றது.
இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றிணைந்து ஒரே புள்ளியில் சேருவதால்தான் அடுத்த பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கும் மஇகாவுக்கும் ஏகோபித்த ஆதரவை வழங்கப் போகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை!”