புத்ரா ஜெயா – பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவமும், அவரது ஆட்சியும் மீண்டும் ஒரு முறை சிக்கலுக்கு உள்ளாகி ஆட்டங் காணத் தொடங்கியிருக்கிறது என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
ஆனால், கடலில் விழுந்த மழைத்துளிகளைப் போன்று எந்தவித சலனமுமின்றி அமைதியாவே இருக்கிறது அரசாங்கத் தரப்பு.
ஊழல் தடுப்பு ஆணையமோ, புதிய அதிர்ச்சி தரும் விவரங்களை விசாரிக்க வேண்டியது காவல் துறையின் வேலை என ஒதுங்கியிருக்கிறது.
தொட்டதற்கெல்லாம் டுவிட்டர் மூலம் தகவல் கூறும் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் இதுவரை இதுகுறித்து எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
இவ்வளவு அமளிக்கும் காரணம், அமெரிக்க அரசாங்கம் 1எம்டிபி ஊழல் குறித்து தொடுத்துள்ள வழக்கில் அந்நாட்டின் நீதித்துறை இலாகா வெளியிட்டிருக்கும் பின்வரும் அதிர்ச்சி தரும் தகவல்கள்:
- 1 எம்டிபி வழியாக இதுவரை 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
- 3.2 மில்லியன் மதிப்புள்ள பிகாசோ ஓவியம் ஒன்று 1 எம்டிபி பணம் கொண்டு வாங்கப்பட்டு, கோடீஸ்வரத் தரகர் ஜோ லோ மூலம் ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காபிரோவிடம் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த ஓவியத்தை அமெரிக்க அரசாங்கத்திடம் சட்டபூர்வமாக ஒப்படைக்கும் நடவடிக்கைகளை டி காபிரோ மேற்கொண்டுள்ளார்.
- இன்று சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி ‘மலேசிய அதிகாரி 1’ என்பவரின் மனைவி 1 எம்டிபி பணத்தின் மூலம் விலையுயர்ந்த கழுத்து நகையான நெக்லசும், மற்ற ஆபரணங்களும் வாங்கினார் என்றும் இவற்றின் மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் இருக்கும் என்றும் அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
- இந்த ஆபரணங்கள் எங்கு வாங்கப்பட்டன என்பது போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து பிரதமர் துறை நேற்று ஜூன் 16-ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி “அமெரிக்க அரசாங்கத்தின் வழக்கு சிலபேரின் பெயர்களை தேவையில்லாமல் வெளியிட்டிருப்பதன்வழி, உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கும், தலையீடுகளுக்கும் வித்திட்டிருக்கிறது” என்றும் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஜோ லோ தனது பொது உறவு நிறுவனத்தின் வழி விடுத்துள்ள அறிக்கையின்படி, அமெரிக்க அரசாங்கம் குற்றம் என்பது நிரூபிக்கப்படாமலேயே ஆதாரம் இல்லாத இந்த வழக்கை அமெரிக்கா தொடர்ந்து கொண்டிருக்கின்றது” எனக் கூறியிருக்கிறார்.