Home Featured நாடு “கேட்டுக் கொண்டால் பிரதமர் பதவியை ஏற்பேன்” – மகாதீர்

“கேட்டுக் கொண்டால் பிரதமர் பதவியை ஏற்பேன்” – மகாதீர்

817
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பவில்லை என சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்திருப்பதை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் அடுத்த பிரதமர் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற ஆரூடங்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.

இப்போது அனைவரின் பார்வையும், மீண்டும் மகாதீர் மீது திரும்பியுள்ளது. பிரதமர் பதவியை அன்வார் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக அவரது மனைவி வான் அசிசா அல்லது அவரது மகள் நூருல் இசா முன்மொழியப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

#TamilSchoolmychoice

குறிப்பாக நூருல் இசா பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், இளம் பெண்மணி என்ற முறையில் பெண்களின் ஆதரவு, அன்வாரின் மகள் என்ற முறையில் கிடைக்கக் கூடிய தோற்றம், இளைய சமுதாயத்தினரின் ஆதரவு என பன்முனைகளிலும் அவருக்கு ஆதரவு குவியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே சமயம், மூத்தவர், 22 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்தவர், உலக நடப்புகளில் அனுபவம் வாய்ந்தவர் எனப் பல்வேறு சிறப்புகள் பெற்ற மகாதீர் மீண்டும் பிரதமராக முன்னிலைப்படுத்தப்படும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் சிங்கையின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், இன்னும் பலர் தன்னை வந்து சந்தித்து பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்றும், யாரும் பிரதமராக முன்வராத நிலையில், நானும் அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது மரியாதைக் குறைவாக கருதப்படும் என மகாதீர் கூறியிருக்கிறார்.

அனைவரும் கூடி என்னைப் பிரதமர் பொறுப்பை ஏற்கக் கேட்டுக் கொண்டால், இடைக்காலப் பிரதமராகப் பதவி ஏற்று, நஜிப் தலைமைத்துவத்தால் ஏற்பட்ட குளறுபடிகளை சீரமைப்பு செய்வேன் என்றும் மகாதீர் உறுதியளித்திருக்கின்றார்.