Home Featured இந்தியா இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

1094
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு இஸ்ரேல் நாட்டுக்கு வருகை புரியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுக்கு வருகை தரும் முதலாவது இந்தியப் பிரதமராவார்.

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் பல ஆண்டுகளாக இஸ்ரேலுடன் இந்தியா நட்புறவு கொண்டிருந்தாலும், தூதரக உறவுகள் கொண்டிருந்தாலும், இந்தியப் பிரதமர் யாரும் நேரடியாக இஸ்ரேலுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டதில்லை.

மற்ற மூன்றாம் நாடுகளில், அனைத்துலக மாநாடுகளில் இஸ்ரேல் பிரதமரும், இந்தியப் பிரதமரும் சந்தித்துக் கொள்வதுதான் வழக்கம்.

#TamilSchoolmychoice

இஸ்ரேல், அரேபிய நாடுகளுடன் முரண்பாடுகள் கொண்டிருப்பதால் அரேபிய நாடுகளுடன் நல்லுறவுகள் பாதிக்கும் என்ற நோக்கத்தில் பொதுவாக இந்தியப் பிரதமர்கள் இஸ்ரேலுக்கு நேரடி வருகை தருவதைத் தவிர்த்து வந்தனர்.

சுதந்திரம் கிடைத்தது முதல் பெரும்பான்மை காலங்களில் காங்கிரசே ஆட்சியில் இருந்ததால், தங்களின் முஸ்லீம் ஆதரவு வாக்கு வங்கி அதிருப்தி கொள்ளும் என்ற காரணத்தால் காங்கிரஸ் பிரதமர்கள் இஸ்ரேலுக்கு முக்கியத்துவம் தந்ததில்லை.

ஆனால், மாறிவரும் அனைத்துலக அரசியல் சூழல்களுக்கு ஏற்ப, தனது வெளிநாட்டு வருகையில் இஸ்ரேலையும் இணைத்துக் கொண்டுள்ளார் மோடி.

இதன் காரணமாக, இஸ்ரேலுக்கு வருகை தரும் முதல் இந்தியப் பிரதமர் என்ற முறையில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்படுகிறது. அத்துடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவே நேரடியாக விமான நிலையம் வந்து மோடியை வரவேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மோடி இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவில் வந்தடைவார்.

விவசாயம், நீர் நிர்வாகம் ஆகியவை இருநாட்டுப் பிரதமர்களின் பேச்சு வார்த்தைகளில் முக்கிய அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்ரேல் நீர் நிர்வாகம் மேற்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.