கோலாலம்பூர் – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான ஒருங்கிணைப்பாளராக மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் (படம்) தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மஇகா போட்டியிடும் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் ஒவ்வொன்றிலும், 5 பேர் கொண்ட குழுவினரை மஇகா மத்திய செயலவை நியமித்து, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒருவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவ்வாறு நியமிக்கப்பட்டிருக்கும் ஐவரில் ஒருவருக்குத்தான் அந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என மஇகாவில் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், தொகுதி பராமரிப்புக்காக நியமிக்கப்படுவதால் அவர்கள்தான் வேட்பாளர்கள் என்பதில்லை, யார் வேட்பாளர் என்பது இறுதி நேரத்தில், தேசிய முன்னணி தலைமைத்துவத்தோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இந்நிலையில், கேமரன் மலை தொகுதியில் மைபிபிபி கட்சியின் சார்பில் தான் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.
எனவே, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களின் தேவைகளைக் கண்காணிக்கவும், 14-வது பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மஇகா சார்பில் மேற்கொள்ளவும் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் நியமனம் பெற்றுள்ளார்.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வந்ததாக மஇகா வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நியமனத்தைத் தொடர்ந்து சிவராஜ் கேமரன் மலை வட்டாரத்தில், அந்தத் தொகுதி மஇகாவுடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மஇகா வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக சிவராஜ் தயார்ப்படுத்தப்படுகிறாரா என்ற ஆரூடங்களும் மஇகாவில் எழுந்துள்ளன.