Home நாடு பாடாங் செராய் : பெரிக்காத்தான் நேஷனல் 16,026 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

பாடாங் செராய் : பெரிக்காத்தான் நேஷனல் 16,026 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

625
0
SHARE
Ad

பாடாங் செராய் : இன்று புதன்கிழமை டிசம்பர் 7-ஆம் தேதி  நடைபெற்ற பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அபார வெற்றி பெற்றது.

அந்தக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட டத்தோ அஸ்மான் நஸ்ருடின் 16,206 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி வாகை சூடினார்.

இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி-மஇகா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிவராஜ் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக விலகுவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். இருப்பினும் வாக்குச் சீட்டில் அவர் பெயர் இடம் பெற்றிருந்ததால் 2,983 வாக்குகளை அவர் பெற்றார்.

#TamilSchoolmychoice

50 வயதான அஸ்மான் 51,637 வாக்குகளைப் பெற்றார். பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் போட்டியிட்ட டாக்டர் முகமட் சோஃபி ரசாக் 35,377 வாக்குகள் பெற்றார்.

பெஜூவாங் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹம்சா அப்துல் ரஹ்மான் 424 வாக்குகளை மட்டுமே பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

சுயேச்சை வேட்பாளர் ஆனந்தா ஏ.கே. 846 வாக்குகள் பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

வாரிசான் சபா கட்சியின் சார்பில் போட்டியிட்ட முகமட் பக்ரி ஹாஷிம் 149 வாக்குகளை மட்டுமே பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினரும், 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதிக்கான பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருமான கருப்பையா முத்துசாமி கடந்த நவம்பர் 16-ஆம் தேதி காலமானார்.

அதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. வேட்பாளர் ஒருவர் மரணமடைந்த காரணத்தால், பாடாங் செராய் தொகுதிக்கான இடைத் தேர்தல்  டிசம்பர் 7-ஆம் தேதி நடத்தப்பட்டது.

கருப்பையாவுக்குப் பதிலாக புதிய வேட்பாளராக முகமட் சோஃபி ரசாக் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

முன்னாள் இராணுவ வீரரான கருப்பையா 2018 பொதுத் தேர்தலில் 8,813 வாக்குகள் பெரும்பான்மையில் பாடாங் செராய் தொகுதியில் வெற்றி பெற்றார். தேசிய முன்னணி வேட்பாளர் மசீசவின் டத்தோ லியோங் யோங் கோங், பாஸ் வேட்பாளர் முகமட் சோப்ரி ஓஸ்மான் ஆகியோரை அவர் தோற்கடித்தார்.

இந்த முறை பாடாங் செராய் தொகுதி 133,870 பதிவு பெற்ற வாக்குகளைக் கொண்டிருக்கிறது.

முகமட் சோஃபி ரசாக் ஒரு வழக்கறிஞராவார். கெடா மாநில பிகேஆர் கட்சிக்கும் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கும் அவர் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.

பாடாங் செராய் தொகுதியில் 83,841 மலாய் வாக்காளர்களும் (62.6%) 25.687 இந்திய வாக்காளர்களும் (19.2 %) 23,600 சீன வாக்காளர்களும் (17.6%) இருக்கின்றனர்.