கோலாலம்பூர் : நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் மஇகா துணையமைச்சர் பதவி எதனையும் கோராது என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை நடைபெற்ற மஇகாவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, கட்சியின் தலைமைச் செயலாளர் ஆர்.டி.ராஜசேகரன் விடுத்த அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில் மஇகா சார்பில் போட்டியிட்ட சிவராஜ் சந்திரன் இறுதி நேரத்தில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு பக்காத்தான் ஹாரப்பான் அரசாங்கத்தில் பொறுப்பு வழங்கப்படலாம் என பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மஇகா இந்த முடிவை எடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் அன்வார் 10-வது பிரதமராக நியமிக்கப்பட்டதற்கும் மஇகா மத்திய செயலவை தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.
மாமன்னர் நியமித்திருக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக மஇகா குறிப்பிட்டது.