உலகிலேயே பெரிய பணக்காரர் மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில் கேட்ஸ்தான் என பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலைமை முறியடிக்கப்பட்டிருப்பதாக புளும்பெர்க் என்ற வணிக செய்திகளுக்கான இணையத் தளம் தெரிவித்திருக்கிறது.
இப்போது பில் கேட்சை முந்தியிருப்பவர் இணையம் வழி பல்வகைப் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோஸ் (Jeff Bezos).
அமேசான் நிறுவனத்தின் வணிகம் விரிவடைந்து இந்த ஆண்டில் அபரிதமான இலாபங்களை அந்நிறுவனம் அடையும் என்ற எதிர்பார்ப்புகளினால் அதன் பங்கு விலைகள் உயர்ந்து, தற்போது ஜெப் பெசாசின் மதிப்பு 90.9 அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.
அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ்
இருந்தாலும் பில் கேட்சின் மதிப்பு இன்னும் 90.7 பில்லியன் டாலர் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனால் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இப்போதைக்கு ஜெப் பெசோஸ் பெற்றிருக்கிறார்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக ஜெப் பெசோஸ் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார். தற்போது பில் கேட்சையும் அவர் முந்தி விட்டார்.
இருந்தாலும், இதுவரையில் 28 பில்லியன் டாலர் வரை மக்கள் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கியிருக்கும் பில் கேட்ஸ்தான் மனதாலும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற கருத்தும் சிலரால் டுவிட்டர் தளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.