Home நாடு தந்தை பெயரைச் சேர்த்துக் கொள்வதில் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

தந்தை பெயரைச் சேர்த்துக் கொள்வதில் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

921
0
SHARE
Ad

Judgementபுத்ராஜெயா – முறையாகத் திருமணம் செய்யாத பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள், தங்களது தந்தையின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முக்கியத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அறிவித்தது.

இதன் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு தேசிய ஃபாட்வா குழு, எடுத்த தீர்மானம் செல்லாத நிலையை அடைந்திருக்கிறது.

ஃபாட்வா தீர்மானத்தின் படி, மணமாகாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளும், மணமான 6 மாதத்திற்குள் பிறந்த குழந்தைகளும், தந்தையின் பெயரை தங்களது பெயருடன் இணைத்துக் கொள்ள முடியாது.

#TamilSchoolmychoice

ஆனால், தற்போது இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறுகையில், தேசிய ஃபாட்வா குழு வெளியிட்ட தீர்ப்பு, தேசியப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநருக்குப் பொருந்தாது என்றும், தந்தை என்று கூறுபவரின் பின்புலங்களை ஆராய்ந்து அதற்கான உரிமத்தை கொடுக்கும் உரிமை தேசியப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநருக்கு உண்டு என்றும் அறிவித்திருக்கிறது.

பிறப்பு, இறப்புச் சட்டம் பிரிவு 13 ஏ (2)-ன் படி, இந்த விவகாரத்தில் தந்தை ஸ்தானத்திற்கு உரிமை அளிக்கும் அதிகாரம் தேசியப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநருக்கு உள்ளது என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமது தீர்ப்பில் கூறியிருக்கிறது.