கோலாலம்பூர் – தனது பதவி காலத்தின் போது, இந்திய சமுதாயத்திற்காக மஇகா மூலம் வழங்கப்பட்ட நிதி எங்கே சென்றது என்றே தெரியவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருப்பதை மஇகா தேசியப் பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி மறுத்திருக்கிறார்.
மகாதீரின் 22 ஆண்டுகாலப் பதவிக் காலத்தின் போதும், கடந்த 2003-ம் ஆண்டு அவர் பதவி விலகிய பின்னரும், மஇகா-விற்கு ஒதுக்கிய நிதிகள் வேறு வழிகளில் சென்றுவிட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை என்று வேள்பாரி எப்எம்டி-யிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஹிண்ட்ராப்பைச் சந்தித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாதீர், மஇகாவிற்கு வழங்கப்பட்ட நிதி குறித்து இப்படி ஒரு அறிவிப்பைச் செய்கிறார் என்பதையும் வேள்பாரி சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அதோடு, அவ்வாறு மஇகா-வுக்கு வழங்கப்பட்ட நிதி வேறு வழிகளில் சென்றிருந்தால், மகாதீர் ஏன் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் வேள்பாரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஹிண்ட்ராப்புக்கு ஆதரவு தேடும் வகையில், மஇகா பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறி, இந்திய சமுதாயத்தைத் திசை திருப்ப முயற்சி செய்கிறார் மகாதீர் என்றும் வேள்பாரி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, நேற்று வியாழக்கிழமை, எதிர்கட்சிகளுடன் ஹிண்ட்ராப்பை இணைக்கும் முயற்சியில் ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தியை மகாதீர் நேரில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.