Home நாடு மகாதீர் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை: தேவமணி

மகாதீர் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை: தேவமணி

1112
0
SHARE
Ad

sk-devamaniகோலாலம்பூர் – தனது பதவி காலத்தின் போது, இந்திய சமுதாயத்திற்காக மஇகா மூலம் வழங்கப்பட்ட நிதி எங்கே சென்றது? என்றே தெரியவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருப்பதை மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி மறுத்திருக்கிறார்.

இது குறித்து எப்எம்டி-யிடம் தேவமணி கூறியிருக்கும் தகவலில், மகாதீர் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், இந்திய சமுதாயத்திற்காக, அப்போது மஇகா தேசியத் தலைவராக இருந்த டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவிடம் சொற்ப நிதியை மட்டுமே வழங்கினார் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், அப்போது ஒதுக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் அந்தந்த அமைச்சகம் மற்றும் முகமைகளின் கீழ் தான் சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடைந்தது. ஆனால், டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி ஏற்றதில் இருந்து, நிதிகள் அனைத்தும், அரசு சாரா அமைப்புகள் உட்பட, நஜிப் மூலமாகவே நேரிடையாக சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடைகின்றது என்றும் தேவமணி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்படும் நிதிகள், எந்த ஒரு இடைத்தரகரும் இன்றி நேரடியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் நஜிப் தன்னிடம் கூறியதாகவும் தேவமணி தெரிவித்திருக்கிறார்.

மேலும், “கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகளுக்காக 300 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது. அதோடு, நூற்றுக்கணக்கான மில்லியன்கள், தெக்குன், சீட் போன்ற அமைப்புகளின் மூலமாக கடனுதவியாகவும் வழங்கப்பட்டது” என்றும் தேவமணி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மகாதீர் காலத்தில் தமிழ்ப் பள்ளிகள் கட்டுவதில் பொதுப்பணித்துறை பலக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது என்றும், ஆனால் நஜிப் பதவி ஏற்றதற்குப் பிறகு, தமிழ்ப் பள்ளிகள் கட்டுவதில் இந்தியக் குத்தகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் தேவமணி தெரிவித்திருக்கிறார்.

நஜிப் பதவி ஏற்றதற்குப் பின்னர் தான் இந்திய சமுதாயத்தின் பங்கு உரிமை 1.1 விழுக்காட்டில் இருந்து 1.9 விழுக்காடாக உயர்ந்தது என்பதையும் தேவமணி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மலேசிய மெட்ரிகுலேசன் திட்டங்களில் இந்திய மாணவர்களுக்கான இடத்தையும் நஜிப் அதிகரித்ததாகவும் தேவமணி குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படியாக இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு நஜிப் நேரடியாக பங்காற்றுவதோடு, நம்பிக்கையையும் கொடுக்கிறார் என்றும், மகாதீர் காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை என்றும் தேவமணி தெரிவித்திருக்கிறார்.