Home நாடு மஇகா சட்டவிதித் திருத்தங்கள்: தேர்தல் மாற்றங்கள் என்ன?

மஇகா சட்டவிதித் திருத்தங்கள்: தேர்தல் மாற்றங்கள் என்ன?

1627
0
SHARE
Ad

mic-general assembly-23092017 (3)கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை (23 செப்டம்பர் 2017) மஇகாவின் 71-வது பொதுப் பேரவையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்றுபூர்வ சட்டவிதித் திருத்தங்கள், மஇகா தேர்தல் நடைமுறைகளில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டவிதித் திருத்தங்கள் சங்கப் பதிவகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டப் பின்னர், அமுலுக்கு வரும்.

அடுத்த ஆண்டு, 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மஇகா கட்சித் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த சட்டவிதித் திருத்தங்கள் மூலம் மஇகா தேர்தல்கள் எத்தகைய மாற்றங்களைக் காணும்? சுருக்கமாகப் பார்ப்போம்:-

தேசியத் தலைவர் தேர்தல்

  • இனி ஒரு வேட்புமனுவுக்கு ஒரு கிளைத் தலைவர் முன்மொழிய, மற்றொரு கிளைத் தலைவர் வழிமொழிய வேண்டும். மொத்தம் 250 வேட்புமனுக்களை – அதாவது குறைந்த பட்சம் 500 கிளைகளின் ஆதரவைப் பெற்றால்தான் தேசியத் தலைவருக்கான போட்டியில் குதிக்க முடியும்.
  • MIC-Logoஇதுவரையில் ஒரு தேசியத் தலைவர் வேட்புமனுவுக்கு 6 கிளைகள் முன்மொழிந்து, வழி மொழிந்து, மொத்தம் 50 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும், அதன்வழி தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிட 300 கிளைகளின் ஆதரவு வேண்டும் என்றிருந்த சட்டவிதி மாற்றப்படுகிறது.
  • இதுவரையில் கிளைத் தலைவர்கள் மட்டுமே வாக்காளர்களாக வாக்களித்து தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இனி ஒவ்வொரு கிளையிலிருந்தும் தலைவர், துணைத் தலைவர்,செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், தகவல் பிரிவு தலைவர், இளைஞர் பகுதித் தலைவர், மகளிர் பகுதித் தலைவி, புத்திரா தலைவர், புத்திரி தலைவர் என தலா 10 பேர் வாக்களிப்பர்.
  • இதன் காரணமாக, தற்போது 4,200 மஇகா கிளைகள் இயங்கி வருகின்றன என்பதை வைத்து சுமார் 42,000 பேர் வாக்களித்து இனி தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

தேசியத் துணைத் தலைவர், தேசிய உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள்

  • MIC Logo 440 x 215மேற்கண்ட பதவிகளுக்கான தேர்தல்களில் ஒவ்வொரு கிளையிலிருந்தும் கிளைத் தலைவர், தலைவர், துணைத் தலைவர்,செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், தகவல் பிரிவு தலைவர், என ஆறு பேர் வாக்களிப்பர்.
  • இதன் மூலம் இனி, ஏறத்தாழ 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைப் பொறுப்பாளர்கள் வாக்களித்து மேற்கண்ட பதவிகளுக்கானவர்களைத் தேர்ந்தெடுப்பர்.

மாநிலப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல்கள்

mic-general assembly-23092017 (2)

இதுவரையில் மாநிலப் பொறுப்பாளர்கள் தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் இனி, தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  • ஒவ்வொரு மாநிலத்துக்கும் இனி தேர்தல்கள் நடத்தப்பட்டு, மாநில அளவில் 10 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் இருந்து மாநிலத்துக்கான தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், தகவல் பிரிவுத் தலைவர் ஆகிய பொறுப்பாளர்கள் தேசியத் தலைவரின் ஒப்புதலோடு, மாநிலத் தலைவரால் நியமிக்கப்படுவார்.
  • இந்த 10 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களுக்கும் ஒவ்வொரு கிளையிலிருந்தும் கிளைத் தலைவர், தலைவர், துணைத் தலைவர்,செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், தகவல் பிரிவு தலைவர், என ஆறு பேர் வாக்களிப்பர். இதன் மூலம் மாநிலத் தலைமைத்துவத்தினரும் இனி கிளைகளின் அடிமட்டப் பொறுப்பாளர்களினால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

MIC71(c)

  • மாநிலத் தலைவராக நியமிக்கப்படுபவர், தன்னுடன் போட்டியிட்டு வென்ற 10 செயற்குழு உறுப்பினர்களிலிருந்து மாநிலத்துக்கான துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், தகவல் பிரிவுத் தலைவர் ஆகியோரை தேசியத் தலைவரின் ஒப்புதலுடன் நியமிப்பார்.

தொகுதிகளுக்கான தேர்தல்கள்

  • இதுவரையில் தொகுதிகளுக்கு அத்தனைப் பதவிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி, தொகுதித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளுக்கு மட்டுமே தேர்தல்கள் நடத்தப்படும்.
  • மற்ற பதவிகளுக்கானப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதித் தலைவர், தேசியத் தலைவரின் ஒப்புதலோடு நியமிப்பார்.

ஒரு பதவிக்கு மட்டுமே போட்டி

mic-general assembly-23092017 (12)மஇகா தேர்தல்களில் செய்யப்பட்டிருக்கும் மற்றொரு முக்கிய மாற்றம் தேசிய நிலைகளில் போட்டியிடுபவர்கள் இனி ஒரே ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும்.

அதாவது தேசியத் தலைவர், தேசியத் துணைத் தலைவர், தேசிய உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகிய பதவிகளில் ஏதாவது ஒரு பதவிக்கு மட்டுமே ஒருவர், ஒரு தேர்தலில் போட்டியிட முடியும்.

இதன் மூலம் தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஒருவர், அதில் தோல்வியுற்று விட்டால், சில மாதங்கள் கழித்து நடைபெறும் தேசியத் துணைத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் மத்திய செயலவைப் பதவிகளுக்குப் போட்டியிட முடியாது.

இளைஞர், மகளிர், புத்திரா, புத்திரி

மேற்கூறிய பதவிகளுக்கான தேர்தல்கள் தவிர்த்து, இளைஞர், மகளிர், புத்திரா, புத்திரி பிரிவுகளுக்கும் இனி தனித்தனியாக தேர்தல்கள், அவர்களின் மாநாடுகளில், நடத்தப்படும், எதிலும் இனி நியமனங்கள் கிடையாது.

இதன் மூலம், இளைஞர், மகளிர், புத்திரா, புத்திரி பிரிவுகளிலும் போட்டிகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை உருவாக்கப்படும்.

கிளைகள்

MIC71(d)மஇகாவில் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டவிதிச் சீர்திருத்தங்களில் மைய இழையாக இருக்கும் இலக்கு அடிமட்டத்தில் கிளைகளைப் பலப்படுத்துவதுதான்.

புதிய சட்டவிதித் திருத்தங்கள் அமுலுக்கு வந்த பின்னர் நடத்தப்படும் தேர்தல்களில் அனைத்து நிலைகளிலும் இனி கிளைத் தலைவர்களே ஆதிக்கம் செலுத்துவர்.

முன்பெல்லாம், தொகுதித் தலைவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு வரும் பேராளர்கள் மட்டுமே தேசிய நிலையிலான பகுதிகளுக்கு வாக்களிப்பர். இனி அனைத்து கிளைகளும் வாக்களிக்கும். அதிலும் தலைவர்கள் மட்டுமின்றி அதன் பொறுப்பாளர்களே நேரடியாக வாக்களிப்பர்.

இதன் மூலம், கிளைகளுக்கு எல்லா நிலைகளிலும் முக்கியத்துவம் ஏற்பட்டு, தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்ற கடப்பாட்டை, முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்து, தீவிரமாக, உற்சாகத்துடன் அவர்கள் இனி இயங்கத் தொடங்குவார்கள்.

அதன் மூலம் கட்சியின் செயல் நடவடிக்கைகள் மேலும் வலுவடையும், கட்சியின் கட்டமைப்பும் வலிமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்