சென்னை – (மலேசிய நேரம் மாலை 6.00 மணி நிலவரம்) இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுடன் சாலை வழியே காரில் சென்னை வந்தடைகிறார்.
அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவரது பரோல் எனப்படும் தற்காலிக விடுதலை தொடங்குகிறது. 5 நாட்களுக்கான பரோலின் போது அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பார்.
சென்னையில் தங்கியிருக்கும்போது அவராக யாரையும் அழைத்துப் பேச முடியாது. தங்கியுள்ள வீடு மற்றும் மருத்துவமனை தவிர வேறு எங்கும் அவர் செல்ல முடியாது.
ஆனால், அவரைச் சந்திக்க வருபவர்களுக்குத் தடையில்லை எனத் தெரிகிறது. அவரைச் சந்திக்கப் பலர் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சசிகலாவின் தற்காலிக விடுதலை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார் சசிகலாவின் பரோல் எந்த அதிர்வையும் கட்சியில் ஏற்படுத்தாது என்றும், எந்த அமைச்சரும் அவரைச் சந்திக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.