புதுடில்லி – (மலேசிய நேரம் மாலை 5.45 மணி நிலவரம்) அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் நடப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்த அணிக்கு வழங்கப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையின் வழி உறுதிப்படுத்தியுள்ளது.
சுமார் 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு ஆவணத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கின்றது.
இதனைப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உறுதிப்படுத்தி, இது நியாயமான தீர்ப்பு என வர்ணித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி அணியில் 111 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும் மாறாக 20 சட்டமன்ற உறுப்பினர்களே டிடிவி தினகரனின் எதிரணியில் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே போன்று, முதலமைச்சர் அணியில் 34 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களும், 8 ராஜ்ய சபா உறுப்பினர்களும் ஆதரவாக இருக்கின்றனர்.
எதிரணியான தினகரனுக்கோ 6 நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆதரவாக இருக்கின்றனர் என்றும், பெரும்பான்மை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அணி என்ற முறையில் முதலமைச்சர் அணிக்கு அதிமுக பெயர், சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து அதிமுக தலைவர்களும், தொண்டர்களும் இந்திய நேரப்படி மாலை 4.45 மணிக்கு ஜெயலலிதா சமாதியில் கூடுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நிறைவடையும் தருணத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.