சென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், தமிழக அரசியலின் புதிய திருப்பமாக மதிமுக தலைவர் வைகோ திமுக வேட்பாளருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (3 டிசம்பர் 2017) நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இந்த தீர்மானத்தின் சாராம்சங்களை வைகோ பத்திரிக்கையாளர்களிடம் அறிவித்தார்.
2004-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாக வைகோ திமுகவுடன் இணக்கம் பாராட்டி ஆதரவு தெரிவித்திருக்கிறார். வைகோவும், ஸ்டாலினும் எதிரும் புதிருமாகச் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வைகோவை திமுகவுக்கு ஆதரவு தரச் செய்தது ஸ்டாலினின் சிறந்த இராஜதந்திரமாகவும், அரசியல் வியூகமாகவும் தமிழக அரசியலில் பார்க்கப்படுகிறது.
“தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டுக் காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் சூழல், தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும், நம்பிக்கை இன்மையையும் உருவாக்கி இருக்கின்றது. அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்ட அண்ணா தி.மு.க. ஆட்சி, மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய பாரதிய ஜனதா அரசிடம் பலி கொடுத்துவிட்டு, டெல்லியின் தாள் பணிந்து கிடப்பதால், தமிழக மக்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகி உள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக மாநில சுயாட்சி முழக்கத்தைத் தமிழ் மண்ணில் இருந்துதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுப்பினார்கள்.
“பேரறிஞர் அண்ணாவின் அடியொற்றி, டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியதோடு, இந்தியாவின் பல்வேறு மாநிலத் தலைநகரங்களில் மாநில சுயாட்சி முழக்கம் எழக் காரணம் ஆனார்கள். ஆனால் இன்று, மாநில சுயாட்சிக் கோரிக்கையை நிராகரித்து, கூட்டு ஆட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தோடு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது” என மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
“தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட அ.தி.மு.க. அரசுக்கு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மூலம் பாடம் கற்பிக்க வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது. அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, வருங்காலத் தமிழகத்தின் நலனையும் கருத்தில்கொண்டு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மகத்தான தியாகத்தாலும், அளப்பரிய சாதனைகளாலும் ஒரு நூற்றாண்டுக் காலமாகக் கட்டி எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டையாம் திராவிட இயக்கத்தைத் தகர்ப்பதற்கும் சிதைப்பதற்கும் கங்கணம் கட்டிக் கொண்டு, இந்துத்துவ சக்திகளும், திராவிட இயக்கத்தின் பரம எதிரிகளும், நாலாத் திசைகளில் இருந்தும் பலமுனைத் தாக்குதல் நடத்தும் சூழலில், திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கவேண்டிய வரலாற்றுக் கடமை மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு இருக்கின்றது” என்றும் மதிமுகவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“எனவே, ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவது என்றும், வெற்றிக்காகப் பணியாற்றுவது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கின்றது” என்றும் வைகோ இந்த அறிக்கையின் வழி தெரிவித்திருக்கிறார்.