கோலாலம்பூர் – அடுத்த 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இடைக்காலப் பிரதமராக துன் மகாதீரையும், இடைக்காலத் துணைப் பிரதமராக பிகேஆர் கட்சித் தலைவியும், அன்வார் இப்ராகிமின் மனைவியுமான டத்தின்ஸ்ரீ வான் அசிசாவையும் நியமிக்க அந்தக் கூட்டணி முன்மொழிந்துள்ளது.
எனினும் இந்தப் பரிந்துரைக்கு பிகேஆர் நிறுவனர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அனுமதிக்காக அந்தக் கூட்டணி காத்திருக்கிறது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்திய பிகேஆர் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஜோஹாரி அப்துல் இந்தப் பரிந்துரை, வெள்ளி-சனி இருநாட்களில் புத்ரா ஜெயாவில் நடைபெற்ற பக்காத்தான் கூட்டணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
அன்வார் ஒப்புதல் அளித்தால் எங்களுக்கும் இந்த பரிந்துரையில் முழு சம்மதம் என்றும் ஜோஹாரி கூறியிருக்கிறார்.
அன்வார் தற்போது ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு காரணமாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அடுத்தாண்டு ஜூன் மாத வாக்கில் அவர் தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியேறுவார். இருப்பினும், அவர் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அரசியல் பதவிகளில் அமர முடியாது.
இந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் துன் மகாதீரை பிரதமராகவும், வான் அசிசாவை துணைப் பிரதமராகவும் முன்னிறுத்தி, பக்காத்தான் கூட்டணி பிரச்சாரங்கள் மேற்கொள்ளும்!