கிள்ளான் – தமிழகத்தில் மாமியார் கொடுமையில் தான் சிக்கித் தவிப்பதாக சில தினங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் கண்ணீர் விட்டுக் கதறிய மலேசியப் பெண் ஒருவர், நாளை செவ்வாய்க்கிழமை நாடு திரும்புகிறார்.
கடந்த சனிக்கிழமை கிள்ளான் காவல்நிலையத்தில், சிறுபான்மையினர் உரிமை செயல் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணன் ரங்கசாமி அளித்த புகாரின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ராமநாதபுரம் உச்சிபுலி காவல்நிலையத்தைச் சேர்ந்த துணைக் கண்காணிப்பாளர் சதீஸ் குமார் கூறுகையில், தேவசூரியா சுப்ரமணியம் என்ற கோலாலம்பூரைச் சேர்ந்த பெண், தனது 4 வயது மலேசிய மகனுடன் மலேசியாவுக்குத் திரும்பவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அவருக்கான விமான டிக்கெட்டுகள் நாளை முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் வெளியான காணொளியில், தான் மலேசியாவைச் சேர்ந்தவர் என்றும், தான் தற்போது இராமநாதபுரத்தில் சிக்கித் தவிப்பதாகவும், தன்னை தனது மாமியார் மற்றும் குடும்பத்தினர் சித்திரவதை செய்வதாகவும் கண்ணீர் விட்டு கதறினார் தேவசூரியா.
தனது 4 வயது மகனை மாமியார் தன்னுடன் அனுப்ப மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து அக்காணொளி பலராலும் பகிரப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்ட அவர், தனது முதல் காணொளியைப் பரப்ப வேண்டாம் என்றும், தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.