சென்னை: தமிழ் நாட்டில் பரபரப்பான செய்திகளை வெளியிடுவதிலும் திமுக அரசாங்கத்திற்கு எதிரான தகவல்களை வெளியிடுவதிலும் முன்னணி வகித்த இணைய ஊடகம் சவுக்கு. அதனை நடத்தி வந்த சவுக்கு சங்கம் தமிழ் நாடு காவல் துறையின் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டபோது அவரின் காரில் கஞ்சா வைத்திருந்ததாக காவல் துறை அறிவித்தது. அதைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்படார்.
பெண் காவலர்களை தரக் குறைவாகப் பேசியது தவறுதான் என்றாலும் சாதாரண சவுக்கு சங்கரை கஞ்சா சங்கராக மாற்ற பார்க்கிறார்களா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
சொந்த இணைய ஊடகத்தை நடத்துவதோடு, மற்ற இணையத் தளங்களுக்கும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார்.
அவ்வாறு யூடியூப் தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்பில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கோவை மாநகர காவல் துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்து, தேனி சென்ற காவல்துறையினர் அவரைக் கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர். காவல்துறை வாகனத்தில் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்றபோது தாராபுரம் பகுதியில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சவுக்கு சங்கருக்கும் காவல் துறையினருக்கும் காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் இன்று புதன்கிழமை (மே 8) மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.