கோலாலம்பூர் – போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 54 வயதான ஆஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு மலேசிய நீதிமன்றம் இன்று புதன்கிழமை தண்டனை வழங்கவிருக்கிறது.
4 பிள்ளைகளுக்குத் தாயான மரியா எல்விரா பிண்டோ எக்ஸ்போஸ்டோ என்ற அந்தப் பெண்ணின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்படலாம் என மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.
என்றாலும், கடந்த நவம்பர் 30-ம் தேதி மலேசிய நாடாளுமன்றத்தில், போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்கு மரண தண்டனை விதிப்பதை இரத்து செய்யும் படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருக்கின்றனர்.
மேலும், போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் முடிவை நீதிபதி எடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு, டிசம்பர் 7-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், 1.5 கிலோ மெத்தாபெத்தாமின் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததற்காக எக்ஸ்போஸ்டோ கைது செய்யப்பட்டார்.
அவர் வைத்திருந்த கைப்பையில், போதைப் பொருள் அடங்கிய பொட்டலங்கள் வைத்துத் தைக்கப்பட்டிருந்தன.
எனினும், அப்போதைப் பொருள் தான் கொண்டு வந்த பையில் இருப்பது தனக்குத் தெரியாது என்றும், இணையத்தில் சந்தித்த நபர் தான் தனக்கு அப்பையைக் கொடுத்ததாகவும் எஸ்போஸ்டோ தெரிவித்தார்.