புதுடெல்லி – தனது பயணப் பெட்டி மற்றும் கைப்பையில் 5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3.24 கோடி ரூபாய்) திருட்டுத்தனமாக மறைத்து வைத்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப் பெண் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா என்ற 25 வயதான விமானப் பணிப்பெண், கடந்த திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் டெல்லியிலிருந்து ஹாங்காங் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து பணிக்குச் சென்றார்.
இந்நிலையில், விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில், தேவ்ஷி அமெரிக்க டாலர்களைக் கடத்துவதாக வருவாய் உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக அவ்விமானத்தை நிறுத்திய அதிகாரிகள் சோதனையிட்டனர்.
தேவ்ஷியின் உடமைகளில் நடத்திய சோதனையில், 3.24 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை, அவரது பெட்டியில் இருந்து அதிகாரிகள் மீட்டு, தேவ்ஷியைக் கைது செய்தனர்.
தேவ்ஷியிடம் நடத்திய விசாரணையில், அமித் மல்ஹோத்ரா என்பவரிடமிருந்து, இது போன்ற டாலர்களைப் பெற்று தான் பணியாற்றிய விமானத்தில் கடத்தியது தெரியவந்தது.
இதுவரை 7 முறை இது போன்ற கடத்தலை செய்திருக்கும் தேவ்ஷி, ஒவ்வொரு முறைக்கும் தலா 1 லட்ச ரூபாய் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.