ஸ்ரீவில்லிப்புத்தூர் – ஆண்டாளை இழிவாகப் பேசியதால் கவிஞர் வைரமுத்துவைக் கைது செய்ய வேண்டும் என்று கூறி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமானுஜ ஜீயர் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகின்றது.
தினமணி நாளிதழ் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த வாரம் நடந்த ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள் என இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆகியவை குறித்து விளக்கமளித்தார்.
வைரமுத்துவின் இவ்விளக்கம் ஆண்டாள் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எனினும், “தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல” என இரண்டு நாட்களுக்கு முன்பு வைரமுத்து கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.