கோலாலம்பூர் – மலேசியாவில் உடல்நலத்தைப் பேணுவதன் அடிப்படையில், மலையேற்றம் செல்பவர்களும், காட்டுக்குள் சென்று சுத்தமான காற்றை ரசிப்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.
இந்நிலையில், குழுவாகக் காட்டுக்குள் செல்லும் அவர்களில், யாராவது ஒருவர் வழிதவறிச் சென்றுவிடும் போது தான் சிக்கல் ஏற்படுகின்றது.
காரணம், பொதுவாக மலையேற்றம் செல்பவர்கள் ஃபேஸ்புக் அறிவிப்புகள் மூலமாகவோ அல்லது வாட்சாப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தான் குழுவாக இணைகின்றனர். ஆனால் அவ்வாறு குழுவாகச் செல்பவர்களில் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் அவ்வளவு அறிமுகம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
இதனால் காட்டுக்குள் யாராவது ஒருவர் தொலைந்து விட்டால், அவர்களின் அடையாளங்களை வைத்துத் தேடிக் கண்டறிவதில் வனத்துறையினருக்கும், மீட்புக்குழுவினருக்கும் சிக்கல் ஏற்படுகின்றது.
எனவே, மலையேற்றத்திற்காகவோ, காட்டுக்குள்ளோ செல்பவர்கள் முறையாக தங்களது சுய விவரங்களைப் பதிவு செய்து முன் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டுமென வனத்துறை அறிவித்திருக்கிறது.
இது குறித்து காவல்துறை மற்றும் திட்டமிடல் பிரிவின் துணை பொது இயக்குநர் டத்தோ ரோஸ்லான் ஆரிபின் கூறுகையில், “அவர்கள் முன்அனுமதி பெற்று செல்லும் போது, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எங்களால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். அதே போல் காட்டுக்குள் செல்ல எந்த நேரம் சிறந்தது, எது பாதுகாப்பான வழி என்பதை எங்களால் வானிலையின் அடிப்படையில் தகவல் வழங்க முடியும்.”
“அதேவேளையில், அனுமதியின்றி காட்டுக்குள் சென்று ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் சம்பந்தப்பட்டவரின் காப்பீடும் செல்லாததாகிவிடும். நாங்கள் யாரையும் தடுக்கவில்லை. முன் அனுமதி பெற்றுச் செல்லுங்கள் என்று தான் சொல்கிறோம். சில மாநிலங்களில் அனுமதி வழங்குவதற்கு 10 ரிங்கிட் மட்டுமே கட்டணம் விதிக்கிறார்கள்” என்று ரோஸ்லான் தெரிவித்திருக்கிறார்.
அதேவேளையில், தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது, தேசிய வனச்சட்டம், பிரிவு 47-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 10,000 ரிங்கிட் அபராதமும், 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமிருப்பதையும் ரோஸ்லான் சுட்டிக்காட்டியிருக்கிறார்.